Pages

Wednesday, February 18, 2015

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை: ஆசிரியர் மன்றம் கருத்து

சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரை அரசின் புகழ்பாடும் உரையாக உள்ளது. மேலும், ஆசிரியர், அரசு ஊழியர்களை போராட்டத்துக்கு தள்ளும் உரை யாகவும் உள்ளது என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற செயலாளர் மீனாட்சி சுந்தரம் நேற்று வெளியிட்ட அறிக்கை: சட்டப் பேரவையில் தமிழக ஆளுநர் உரையாற்றி உள்ளார்.
சட்டப் பேரவையின் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்க உள்ள விஷயங்களுக்கான குறிப்புகள் ஏதும் உரையில் இடம்பெறவில்லை. கடந்த 2011ம் ஆண்டு தேர்தலின்போது அதிமுக அளித்த வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை. அதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதையும் அரசு கண்டுகொள்ளவில்லை.
எனவே, அனைத்து நிலை ஆசிரியர் இயக்கங்களும் இணைந்த கூட்டமைப்பை (ஜேக்டோ) உருவாக்கி மார்ச் 8ம் தேதி மாவட்ட தலைநகர்களில் மாபெரும் பேரணி, ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம். அதேபோல, அரசு ஊழியர்களின் போராட்டங்களை அரசு அலட்சியப்படுத்தி வருவதால் தலைமை செயலக ஊழியர் சங்கம் உள்ளிட்ட அனை த்து அரசு ஊழியர் சங்கங்களும் இணைந்த கூட்டமைப்பை (ஜியோ) உருவாக்கி மார்ச் 8ல் போராட்டத்தை அறிவிக்க உள்ளன. போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தையில் ஏமாற்றியதால் அவர்களும் போராட்டத்தை நடத்த உள்ளனர்.
இவர்களின் பிரச்னைகள் எதையும் ஆளுநர் தன் உரையில் கண்டுகொள்ளவில்லை. முதல் வகுப்பில் இருந்தே ஆங்கில வழிக் கல்வியை புகுத்தி வரும் அரசு இது. ஆனால் தமிழை வளர்த்து வரும் அரசு என்று ஆளுநர் உரையில் கூறுகிறார். மாநிலம் முழுவதும் 2000 பள்ளிகளை மூடியதை கண்டுகொள்ளாமல் 182 பள்ளிகளை திறந்ததாக அரசை பாராட்டியுள்ளார். 50 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
அந்த உண்மை மறைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரையில் ஆசிரியர்களை பாராட்டவில்லை. ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு தர சட்டம் இயற்றுவது குறித்து ஆளுநர் உரையில் ஏதும் இல்லை. மொத்தத்தில் ஆளுநர் உரை அரசின் புகழ்பாடும் உரையாகத்தான் உள்ளது. எனவே ஜேக்டோ, ஜியோ ஆகியவை இணைந்து மாபெரும் பேராட்டத்தை நடத்த தூண்டும் வகையில் ஆளுநர் உரை உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.