பிளஸ் 2 தேர்வு மையங்களில் பணியாற்ற ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறையில், தில்லுமுல்லு நடக்கிறது; இதை தவிர்க்க, குலுக்கல் முறையில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பணிகள் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடக்கவுள்ளது. தேர்வுக்கான விடைத்தாள் தைக்கும் பணி, தேர்வு மையங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது தேர்வு மையங்களில் பணியாற்றுவதற்கான, ஆசிரியர்கள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
முதன்மை கண்காணிப்பாளர் பணிக்கு, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், துறை அலுவலர் பொறுப்புக்கு முதுநிலை ஆசிரியர், அறை கண்காணிப்பாளர் மற்றும் பறக்கும்படை குழுவுக்கு முதுநிலை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் நியமிக்கப்படுவர். இவற்றில், ஆசிரியர், அவரது மகன் ஒரே பள்ளியில் இருக்கும் பட்சத்தில் அந்த ஆசிரியருக்கு அந்த குறிப்பிட்ட மையத்தில் பணி ஒதுக்கக்கூடாது. இதுபோன்ற மேலோட்டமான விதிகள் மட்டுமே நடைமுறையில் உள்ளன; மற்றவை மீறப்படுகின்றன.
குறிப்பாக, விருப்பப்பட்ட தேர்வு மையத்தை ஓர் ஆசிரியர், தேர்வு செய்யக்கூடாது போன்ற விதிகள் மீறப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கல்வி அதிகாரிகளின் கவனத்தை மீறி, கீழ்மட்ட அளவில் சில ஊழியரை, ஆசிரியர்கள் கைக்குள் போட்டுக் கொண்டு, விரும்பிய மையத்தை தேர்வு செய்கின்றனர். இதனால், பள்ளிக்கு அல்லது குறிப்பிட்ட ஒரு மாணவனுக்கு சாதகமாக, அந்த ஆசிரியர் நடந்து கொள்வதாக சர்ச்சை ஏற்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
கோவையை சேர்ந்த மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், "மாவட்ட கல்வி அதிகாரிகளின் கீழ் பணியாற்றும் சில ஊழியர்களை, ஆசிரியர்கள் சிலர், சரி செய்து விரும்பிய மையங்களை தேர்வு செய்து விடுகின்றனர். இது தவறான செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும். எனவே, குலுக்கல் முறையில் ஆசிரியர்கள் தேர்வுசெய்து, தேர்வு மையங்களுக்கு நியமிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக, தேர்வுத்துறை இயக்குனரிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை இந்தாண்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றனர்.
அலைக்கழிக்கப்படும் ஆசிரியர்கள்: கல்வி உயரதிகாரிகளுக்கு வேண்டியவர்களுக்கு, இதுபோன்ற சலுகைகள் கிடைப்பதாக கூறப்படுகிறது. தேர்வு மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்களின் வீட்டு முகவரி முன்கூட்டியே பெறப்படும். இதன் அடிப்படையில், பள்ளிகளின் துாரத்தை பொறுத்து, ஒதுக்கீடு பணி செய்யப்படும். ஆனால், அலுவலர்கள் செய்யும் சில தில்லுமுல்லு வேலைகளால், சில ஆசிரியர்கள் அதிக துாரம் பயணிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.