கோவை: அரசு பள்ளிகளை மேம்படுத்த, கோவை மாவட்ட கல்வித்துறையால் துவங்கப்பட்ட, பிரத்யேக இணையதளம், தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் கட்டணம் செலுத்தி, பராமரிக்க தவறியதால், பயன்பாட்டில் இல்லாமல் போனது.
கோவை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் , போதுமான உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறை, மதில் சுவர், குடிநீர், கழிப்பறை, ஆய்வகம் உள்ளிட்ட முக்கிய வசதிகள் இல்லாமல் உள்ளன. இப்பள்ளிகளில், வசதிகளை மேம்படுத்த, 2008ம் ஆண்டு, தனியார் பங்களிப்பை பெற, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது.
அதன்படி, பள்ளிகள் வளர்ப் போம் என்ற இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் படி, தங்களுக்கு விருப்பமான அரசுப் பள்ளியை, தனியார் நிறுவனங்களோ, வசதியுள்ள தனிநபரோ, ஐந்து ஆண்டுகளுக்கு தத்து எடுத்துக் கொள்ளலாம். ஐந்தாண்டு காலகட்டத்தில், பள்ளியின் வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
இத்திட்டத்தை, பெரியளவில் விளம்பரம் செய்தது பள்ளிக் கல்வித்துறை. வசதிகள் தேவைப்படும் பள்ளிகள் குறித்த விபரங்களை, பகிரங்கமாக தெரிவிப்பதன் மூலம், அவற்றை தொழில் நிறுவனங்களுக்கு, அடையாளம் காண்பிக்க, கோவை மாவட்டத்துக்கு, அப்போதைய, முதன்மை கல்வி அலுவலராக (சி.இ.ஓ.,) பதவி வகித்த கார்மேகம், சிறப்பு கவனம் எடுத்து, இணையதளத்தை வடிவமைத்தார்.
மாவட்டத்தின் ஏதாவது ஒரு பகுதியின் பெயரை டைப் செய்தால், அப்பகுதியில் உள்ள, அரசுப் பள்ளி எது என்பதையும், அதன் விபரங்களையும் தெரிந்து கொள்ளும் வகையில், இணையதளம் வடிவமைக்கப்பட்டது.
இத்திட்டம், தனியார் நிறுவனங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முதல்கட்டத்திலேயே, 30 அரசு பள்ளிகள், தனியார் நிறுவனங்களால், தத்தெடுக்கப்பட்டன. அவருக்கு பின், சி.இ.ஓ., வாக பதவிவகித்த சேதுராமவர்மாவும் இந்த இணையதளத்தை பராமரித்தார். அதன் பின்பு, வந்த சி.இ.ஓ., க்கள், கண்டுகொள்ளாமல் விட்டதால், இணையதளம் பயன்பாட்டிலிருந்து, காணாமல் போனது.
ஓய்வுபெற்ற அரசு பள்ளி தலைமையாசிரியை விமலா கூறியதாவது: இணையதளம் துவங்கப்பட்ட காலத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு தேவை யான தகவல்களை சேகரிக்கும் பணியில், அப்போது, 22 ஒன்றியங்களைச் சேர்ந்த, 66 தலைமை ஆசிரியர்கள் ஈடுபட்டோம். இதன்மூலம், தங்கள் நிறுவனம் இயங்கும் பகுதியில் உள்ள, அரசுப் பள்ளியை தேர்வு செய்து மேம்படுத்த, தொழில் நிறுவனங்களுக்கு, இந்த இணையதளம் மிகவும் உதவிகரமாக இருந்தது. அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த, தனியார் பங்களிப்பு அவசியம்.
தற்போதும், கல்வித்துறை இதுபோன்ற உதவிகளுக்கு சில தனியார் நிறுவனங்களை நாடி வருகின்றன. இதனால், பெரிய அளவில் இலக்கை எட்ட முடியாது. தற்போதுள்ள, சி.இ.ஓ., இந்த இணையதளத்தை சீரமைத்து, தனியார் பங்களிப்பை நாடினால், அரசு பள்ளிகளின் தரத்தை எளிதாக மேம்படுத்த இயலும். இதற்கென்று தனி அலுவலருக்கு, பொறுப்பு வழங்கினால், எதிர்கால சி.இ.ஓ.,க்களும் இத்திட்டத்தை முறையாக செயல்படுத்துவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.