உதவி பேராசிரியர் பணிக்கு, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யால் நடத்தப்படும், தேசிய தகுதித் தேர்வான, ’நெட்’ வினா முறையில், இந்த ஆண்டு மாற்றம் ஏதும் இல்லை.
தகுதித்தேர்வு:
கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை தேர்வு செய்ய, தேசிய அளவில், யு.ஜி.சி.,யால், ’நெட்’ மற்றும் மாநில அளவில், ’ஸ்லெட்’ தகுதித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இரண்டு தேர்வுகளும் மூன்று தாள்கள் கொண்டவை.
இதில், முதல் இரண்டு தாள், ’அப்ஜெக்டிவ்’ முறையிலும், மூன்றாம் தாள், விரிவான விடை அளிக்கும் முறையிலும் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன், விடைகளை திருத்துவதில் ஏற்பட்ட சிரமத்தை கருத்தில் கொண்டு, ’நெட்’ தேர்வில், மூன்றாம் தாளையும், ’அப்ஜெக்டிவ்’ வகை வினாக்கள் கொண்டதாக, யு.ஜி.சி., மாற்றியது.
கடந்த ஆண்டில், ’நெட்’ தேர்வு முறையில், மேலும் மாற்றம் செய்வது தொடர்பாக, மாணவர்கள், ஆய்வாளர்களிடம் யு.ஜி.சி., கருத்து கேட்டது. அதில் பலரும், மூன்றாம் தாளை விரிவான விடை அளிக்கும் வகையில் மாற்றக் கோரியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, பேராசிரியர் டி.என்.ரெட்டி தலைமையிலான, இரு நபர் குழு ஆய்வு செய்து, சமீபத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. வரும், ஜூனில், ’நெட்’ தேர்வு நடக்க உள்ளது. எனவே, ரெட்டி அறிக்கை தொடர்பாக, யு.ஜி.சி.யின் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், தேர்வு முறையை மாற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.
’அப்ஜெக்டிவ்’:
எனவே, ’நெட்’ தேர்வில் மூன்றாம் தாள், ’அப்ஜெக்டிவ்’ முறையிலேயே இந்த ஆண்டும் தொடரும் என கூறப்படுகிறது. மேலும், ரெட்டியின் அறிக்கை தொடர்பாக ஆய்வு செய்து முடிவெடுக்க, துணை குழு ஒன்றும் அமைக்கப்பட உள்ளதாக, யு.ஜி.சி., வட்டாரத்தில் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment