Pages

Tuesday, February 3, 2015

பணியாளர்கள் நியமனத்தில் காலதாமதம்: அரசு பள்ளிகளில் கணினிகள் வீணடிப்பு

அரசு உயர்நிலை பள்ளிகளில் கணினி இருந்தும், அதற்கான பணியாளர்கள் நியமிக்கப்படாததால் பணிகள் பாதிப்படைந்து உள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், 300க்கும் அதிகமான அரசு உயர்நிலை பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில், 150 பள்ளி களில் மட்டும்தான், தகவல் தொடர்பு வசதிக்காக கணினிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
அதன் மூலம், பள்ளி யின் வளர்ச்சி பணி, திட்ட பணி மற்றும் புகார்கள் குறித்து, உயர் அதிகாரிகள் உடனுக்குடன் அறியவும், உத்தரவுகளை தெரிவிக்கவும் முடியும். வருவாய் துறையுடன், பள்ளி கல்வி துறை இணைந்து, பள்ளி மாணவர்களுக்கான ஜாதி, வருவாய் சான்றிதழ்களையும் வழங்க முடியும். அரசு பொது தேர்வுக்கான அறிவிப்பு, அதற்குரிய மாணவ, மாணவியரின் வரிசை எண் பட்டியல் ஆகியவற்றையும் உடனடியாக தெரிவிக்க முடியும். ஆனால், மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும், கணினி வசதி செய்யப்படவில்லை. அந்த வசதி உள்ள பள்ளிகளில் கணினி பயிற்சி பெற்ற பணியாளர்கள் தற்போது பணியில் இல்லை. உதாரணமாக, காலை 10:00 மணி அளவில், குறிப்பிட்ட ஒரு பள்ளி யின் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை, வகுப்பறை, கழிப்பறைகள் எத்தனை என, கல்வி துறை அலுவலகத்தின் மூலம் விவரம் கேட்டு 'மெயில்' அனுப்பப்பட்டால், அதை குறித்த நேரத்தில் பார்த்து, பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்க உரிய பணியாளர் இருப்பதில்லை.
மற்ற பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் அல்லது கல்வித் துறை அலுவலகத்தினர், யாராவது தொலைபேசி, அலைபேசி மூலம், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு தகவல் தெரிவித்த பின்னரே, கணினியை இயக்க, 'தற்காலிக' ஆள் தேடப்படும் நிலை உள்ளது. அதே போன்று கல்வி துறை அலுவலகத்திற்கு உடனடியாக பதில் தெரிவித்து, 'மெயில்' அனுப்பவும் முடிவதில்லை. அதற்கு காரணம் அந்த கணினி தொடர்ந்து செயல்பாடின்றி முடங்கி கிடப்பதுதான். இதனால் பதில் கடிதம் தயாரித்து, 'நெட்' சென்டர்களுக்கு சென்று மெயில் அனுப்புகின்றனர். கிராமப்புற பள்ளிகளில் நிலைமை இன்னும் மோசம். அவர்கள், 'நெட்' சென்டருக்காக, பல கி.மீ., தூரம் பயணித்து நகர்ப்புறங்களுக்கு சென்று வர வேண்டும்.
இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: இன்றைய உலகில் தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் அரசு பள்ளிகளில் அதற்கான அடிப்படை பயிற்சி பெற்ற பணியாளர்கள் இல்லை. பெரும்பாலான பள்ளிகளில், ஆசிரியர்களே பற்றாக்குறைதான். அதனால், மாணவர்களை கட்டுப்படுத்தவும் முடியவில்லை. அவர்களை தேர்ச்சி அடைய செய்யவும் முடியவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.