Pages

Sunday, February 15, 2015

தேர்வை கண்காணிக்க 3 ஆண்டுகளாக ஒரே அதிகாரி:சேலம், நாமக்கலுக்கு நியமிப்பதில் சர்ச்சை

பொதுத் தேர்வை கண்காணிப்பதில், சேலம், நாமக்கல் மாவட்டங்களுக்கு மட்டும், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, இணை இயக்குனர் பழனிச்சாமியை நியமித்திருப்பது, பல சர்ச்சைகளையும், சந்தேகங்களையும் கிளப்பி உள்ளது.

அரசு தேர்வுத் துறை, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதற்கான பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன், பொதுத் தேர்வை கண்காணிப்பதற்காக, மாவட்டம் வாரியாக கல்வித்துறை அதிகாரிகளை நியமித்து, அதற்கான பட்டியலை, தேர்வுத் துறை வெளியிட்டது.
பட்டியல்:அதன்படி, தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் - சென்னை, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர் அறிவொளி - காஞ்சிபுரம். தொடக்கக் கல்வி
இயக்குனர் இளங்கோவன் - திருவள்ளூர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் ராமேஸ்வர முருகன் - விழுப்புரம், பள்ளிக் கல்வி இயக்குனர் - திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களை கண்காணிப்பர் என அறிவிக்கப்பட்டது.
சந்தேகம்:பல இணை இயக்குனர்களும், பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (மேல்நிலை) பழனிச்சாமி, சேலம், நாமக்கல் மாவட்டங்களை கண்காணிப்பார் என அறிவித்திருப்பது தான், சர்ச்சையையும், சந்தேகத்தையும் கிளப்பி உள்ளது. சேலம், நாமக்கல் மாவட்டங்களுக்கான கண்காணிப்பாளர் பொறுப்புக்கு, பழனிச்சாமி, தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக நியமிக்கப்பட்டு வருகிறார். இவரது நியமனத்திற்கு, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நிர்வாக தரப்பில், கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
கண்காணிப்பு:தலைமையாசிரியர்கள் சிலர் கூறியதாவது:நாமக்கல் மாவட்டம், மாநில அளவில் முதல், 'ரேங்க்' பெறுவதால், இம்மாவட்ட செயல்பாடுகளை, கண்டிப்புடன் கண்காணிப்பார் என கூறுகின்றனர். நாமக்கல் மீது, மாநில அளவிலான அதிகாரிகளுக்கே, பலவித சந்தேகங்கள் இருக்கும்போது, பழனிச்சாமியை மட்டும் தொடர்ந்து நியமிப்பது ஏன்? கடந்தாண்டு, உமா என்ற இணை இயக்குனரை நியமித்துவிட்டு, பின் இவரை நியமித்தனர். வேறு இணை இயக்குனரையும் கூடுதலாக நியமித்தால் தான், நாமக்கல்லில் என்ன நடக்கிறது என்பது தெரியவரும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இயக்குனருக்கு நேர்ந்த 'கதி':தேர்வின் போது, 'ஒத்துழைப்பு' தராத அதிகாரிகளை, பெரிய பள்ளிகள் மதிப்பது கிடையாது. அதே நேரத்தில், 'ஒத்துழைப்பு' வழங்கினால், ராஜ உபசாரம் நடக்கும். நாமக்கல் மாவட்ட பள்ளிகளில் என்ன நடக்கிறது என்பது, அதிகாரிகளுக்கே ெவளிச்சம்.'ஒத்துழைக்காத' அதிகாரிகளுக்கு நேரும் சம்பவங்களில் ஒன்று:தேர்வுத் துறை இயக்குனராக பரமசிவன் இருந்தபோது, சென்னையில் உள்ள பிரபலமான மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு, நிருபர்களுடன் தேர்வை பார்க்க சென்றார். முக்கிய சாலையில் உள்ள, 'கேட்'டுக்கும், பள்ளியின், 'போர்டிகோ'வுக்கும், 200 அடி தொலைவு இருக்கும்.இயக்குனர், மெயின், 'கேட்' முன் வந்ததும், பள்ளி ஊழியர், உடனே கதவை திறக்கவில்லை. 'நிர்வாகத்திடம் கேட்க வேண்டும்' என கூறி, பள்ளிக்குள் சென்று, 10 நிமிடங்கள் கழித்து வந்து, கதவை திறந்தார். இதற்குள், 'என்னென்ன' நடந்திருக்கும் என்பதை அனைவரும் அறியலாம். இதுபோன்ற பள்ளிகள் தான், 'டாப்' பட்டியலில் உள்ளன; 'சீட்' வாங்குவதற்கும், வசதி உள்ளவர்கள் முட்டி மோதுகின்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.