தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு பாடம் சொல்லித்தரும் வகையில் புதிதாக 202 சிறப்பு பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை உள்ளடக்கிய இடைநிலை கல்வித் திட்டத்துக்காக அரசு ரூ. 5.35 கோடி ஒதுக்கி 202 சிறப்பாசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்று 2014ல் சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்த பள்ளிக் கல்வி இயக்குநர் அரசுக்கு ஒரு கருத்துரு அனுப்பினார். அதில், அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் சுமார் 2,178 மாற்றுத்திறனாளி குழந்தைகள் படிப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு கல்வி கற்பிக்க கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் தேவை. மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் கீழ் 202 சிறப்பு பி.எட் ஆசிரியர் பணியிடங்கள் ரூ.9,300-34,800+ தர ஊதியம் ரூ.4,600 ஊதிய விகிதத்தில் தோற்றுவிக்கலாம், அந்த பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப ஆணை வழங்க கோரியிருந்தார்.
பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை கவனமுடன் பரிசீலித்த அரசு அதனை ஏற்று மேற்கண்ட 202 சிறப்பு பி.எட் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்து ஆணையிடுகிறது. இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Good news this is my blog
ReplyDeletetnemploymentnews.in