Pages

Wednesday, February 11, 2015

பொதுத்தேர்விற்கான விடைத்தாளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, கல்வித்துறை அறிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டின், பிளஸ் 2 பொதுத்தேர்விற்கான விடைத்தாள் தயார் செய்யும் பணிகள் தற்போது அனைத்து பள்ளிகளிலும், நடக்கிறது. இப்பணிகளில் கடந்தாண்டில் பின்பற்றிய வழிமுறைகளில், மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, விடைத்தாள்களை விரைவில் தயார்செய்யும்படி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிப்பாடங்கள், உயிரியல், கணக்கு பதிவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பாடங்களுக்கு மட்டுமே, பாடப்பிரிவின் பெயர் அச்சிடப்பட்ட முதன்மை விடைத்தாள் வழங்கப்படும். இதர, பாடப்பிரிவு முதன்மை விடைத்தாள்கள் அனைத்திற்கும் HSE என்ற வகை முதன்மை விடைத்தாளை பயன்படுத்த வேண்டும். வரலாறு பாட விடைத்தாளில், 36 மற்றும் 37 பக்கத்தில் வரைப்படங்கள் வைத்து தைத்தல், வணிகக்கணித பாடத்திற்கு 36, 37 ம் பக்கத்தில், கிராப் ஷீட் வைத்து தைக்கப்பட வேண்டும். மேலும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான விடைத்தாளில், 22 பக்கங்களில் முதல் இரண்டு பக்கங்கள் கோடிடப்படாத பக்கங்களாக உள்ளன. கோடிடப்படாத பக்கங்கள் கொண்ட விடைத்தாள், ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்விற்கு பயன்படுத்த வேண்டும். இத்தேர்வின்போது, விளம்பர வினா - விடை பகுதிக்கு, அந்த கோடிடப்படாத பக்கங்களை பயன்படுத்த வேண்டும். மீதமுள்ள ஆங்கிலம் முதல் தாள் மற்றும் தமிழ் மொழிப்பாட தேர்வின் போது அப்பக்கங்களை பயன்படுத்தக்கூடாது. குறிப்பிட்ட பாடத்தேர்விற்கென நிர்ணயிக்கப்பட்ட வகையைச் சார்ந்த, முதன்மை விடைத்தாளுடன் மட்டுமே அப்பாடத்திற்கான முகப்புத்தாள் வைத்து தைத்தல் அவசியம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

கல்வி வளர்ச்சி நாள் பரிசாக, பள்ளிகளுக்கு 80 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15, கல்வி வளர்ச்சி நாளாக, பள்ளிகளில் கொண்டாடப்படுகிறது. இதற்காக, 80 லட்சம் ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. தேர்வு செய்யப்படும் சிறந்த பள்ளிகளுக்கு, இத்தொகை பரிசு தொகையாக பகிர்ந்தளிக்கப்படும்.


மாவட்டத்துக்கு 4 பள்ளிகள் வீதம், மாநிலம் முழுவதும் சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்படவுள்ளன. மேல்நிலைப் பள்ளிக்கு, 1 லட்சம் ரூபாய், உயர்நிலைப் பள்ளிக்கு, 75 ஆயிரம் ரூபாய், நடுநிலைப் பள்ளிக்கு, 50 ஆயிரம் ரூபாய், துவக்கப் பள்ளிக்கு, 25 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும்.

அதற்காக, சிறந்த பள்ளிகளின் பெயர் பட்டியலை தேர்வுசெய்து அனுப்புமாறு, அந்தந்த மாவட்டங்களுக்கு தமிழக கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கலெக்டர் தலைமையில் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட தேர்வுக்குழு, சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து, வரும் 16க்குள் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த, பரிசுத்தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம். மற்ற பள்ளிகள், எஸ்.எஸ்.ஏ., மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ., ஒதுக்கும் நிதியை பயன்படுத்தி, கல்வி வளர்ச்சி நாளை சிறப்பாக கொண்டாடுமாறு, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.