Pages

Wednesday, February 18, 2015

12 ஆண்டுகளுக்கு பின் ஆசிரியர் சங்கங்கள் மீண்டும் கைகோர்ப்பு: மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த ஆயத்தம்

கடந்த 2003ல், அரசு ஊழியர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட, 32 ஆசிரியர் சங்கத்தினர், 12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒன்றிணைந்து, பல கோரிக்கைகளுக்காக, மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட ஆயத்தமாகி உள்ளனர்.

ஜாக்டோ கூட்டமைப்பு:
முதற்கட்டமாக, அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவை, நேற்று முன்தினம் துவக்கினர்.
இதுகுறித்து, தமிழ்நாடு முதுநிலை ஆசிரியர் சங்க, சேலம் மாவட்ட தலைவர் பாரி கூறியதாவது:
பலவகை ஆசிரியர்களின் நலனுக்காக செயல்படும், 32 சங்கங்கள், 12 ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் ஒருங்கிணைந்து, 'ஜாக்டோ கூட்டமைப்பு' துவக்கி உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில், கடந்த 15ம் தேதி நடந்த கூட்டத்தில், 70 நிர்வாகி கள் பங்கேற்றனர். வரும் 22ம் தேதி, சேலத்தில் போராட்டத்திற்கான ஆயத்த கூட்டம் நடக்கிறது. இதில், கூட்டமைப்புக்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர்.
அரசு, ஆறாவது ஊதியக் குழு முரண்பாடுகளை களைய வேண்டும்; 2004 - 06ல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்;
அனைத்து ஆசிரியர்களுக்கும், பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது உட்பட, ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற, 'ஜாக்டோ' அமைப்பு போராட்டத்தில் ஈடுபடும்.
முதற்கட்டமாக, வரும் மார்ச் 8ம் தேதி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்துவோம். ஆர்ப்பாட்டங்களில், மாநிலம் முழுவதும், 32 சங்கங்களை சேர்ந்த ஆசிரியர் பங்கேற்பர். இவ்வாறு, அவர் கூறினார்.
கடும் நெருக்கடி:
ஆசிரியர்களைத் தொடர்ந்து, அடுத்து அரசு ஊழியர்களும் களத்தில் குதிப்பர் என தெரிகிறது. 2003ல், அரசை கிடுகிடுக்க வைத்ததைப் போல், இப்போதும் கடும் நெருக்கடியை தருவர் என தெரிகிறது.
அரசு ஊழியர், ஆசிரியர் கோரிக்கைகள் குறித்து, அரசு உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, சுமுக தீர்வை எட்டினால், அரசு இயந்திரம் முடங்கு வதை தவிர்ப்பதுடன், மக்களுக்கு ஏற்படும் இன்னல்களையும் தடுத்து நிறுத்த முடியும்.
1.5 லட்சம் பேர் கைது:
அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வின், முந்தைய ஆட்சி யின் போது, அரசு ஊழியர் சங்கங்களும், ஆசிரியர் சங்கங்களும் சேர்ந்து, 'ஜேக்டோ ஜியோ' என்ற கூட்டமைப்பை உருவாக்கி, அரசுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு ஊழியர்களை ஒடுக்க வழிவகுத்த, 'எஸ்மா, டெஸ்மா' சட்டங்களுக்கு எதிராக, அரசு ஊழியர்களும், ஆசிரியர் களும் உரக்க குரல் கொடுத்தனர். அரசு ஊழியர்கள் ஒட்டு மொத்தமாக போராட்டத்தில் குதித்த தால், அரசு இயந்திரம் அடியோடு முடங்கியது.
ஆவேசம் அடைந்த ஜெயலலிதா, 1.5 லட்சம் பேரை கைது செய்ய உத்தரவிட்டார். சங்க நிர்வாகிகளை, நள்ளிரவிலும் வீடு புகுந்து, போலீசார் கைது செய்தனர்;
பெண் ஊழியர்களையும் விட்டுவைக்கவில்லை. சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டனர். அதன்பின் போராட்டம் முடிவு வந்த நிலையில், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பணிக்கு திரும்பினர்.
அரசை கிடுகிடுக்க வைத்த இத்தகைய போராட்டத்தை, 12 ஆண்டு களுக்குப் பின் மீண்டும் நடத்த, அரசு ஊழியர் சங்கங்களும், ஆசிரியர் சங்கங்களும் ஆயத்தமாகி வருகின்றன.

1 comment:

  1. நமது சங்கங்கள் எல்லாம் இவ்வளவு நாள் என்ன செய்தன

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.