Pages

Monday, February 2, 2015

இலவச சமையல் எரிவாயு இணைப்புக்கும் இனி ஆண்டுக்கு 12 உருளைகள்


இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற்ற பயனாளிகளுக்கும் இனி ஆண்டுக்கு 12 எரிவாயு உருளைகள் வழங்கப்படும். இதற்கான உத்தரவை உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.


தமிழகத்தில், முந்தைய திமுக ஆட்சியில் 28 லட்சம் பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, அடுப்பு
வழங்கப்பட்டது. அவர்களுக்கு ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு உருளைகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

நடைமுறையால் அவதி: இணைப்புக்கான முன்வைப்புத்தொகை, தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பெயரில் உள்ளதால், பிற மாவட்டம், நகரங்களுக்கு இடம் பெயர்ந்து செல்லும் பயனாளிகள், முகவரி மாற்றம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.

மேலும், இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்ட பயனாளிகள் இறந்து விட்டால் அந்த எரிவாயு இணைப்பை பயனாளிகளின் வாரிசுதாரர் பெற முடியாத சூழல் இருந்தது. இந்த நடைமுறைகளை எளிமைப்படுத்தி உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்: தற்போது, எண்ணெய் நிறுவனங்களால் அனைத்து எரிவாயு வாடிக்கையாளர்களுக்கும் பாகுபாடின்றி 12 எரிவாயு உருளைகள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. எனவே, இதே நடைமுறையைப் பயன்படுத்தி, விருப்பமுள்ள இலவச எரிவாயு இணைப்பு பெற்ற பயனாளிகள் இனி 12 எரிவாயு உருளைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

அதேபோல், பிற சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் 2-ஆவது எரிவாயு உருளையைப் பெற பின்பற்றப்படும் அதே நடைமுறைகளைப் பின்பற்றி, இலவச எரிவாயு இணைப்பு பெற்ற பயனாளிகளும் 2-ஆவது எரிவாயு உருளையை அதற்குரிய பிணைத்தொகையை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

பெயர், முகவரி மாற்றம்: பெயர் திருத்தம், குடும்ப உறுப்பினர்களிடையே பெயர் மாற்றம் செய்தல் போன்றவை தொடர்பாக மற்ற வாடிக்கையாளர்களுக்கு பின்பற்றப்படும் அதே நடைமுறையை இலவச எரிவாயு இணைப்பு பெற்ற பயனாளிகளும் பின்பற்றலாம். ஆனால், எரிவாயு இணைப்பை பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் அல்லாமல் மூன்றாம் நபருக்கு மாறுதல் செய்து வழங்கக்கூடாது.

இலவச எரிவாயு அடுப்பு பெற்ற பயனாளி மரணம் அடைந்தால் இணைப்பை அவரது வாரிசுதாரருக்கு (அவருக்கு எரிவாயு இணைப்பு இல்லாமல் இருந்தால்) மாற்றி வழங்கலாம். இதற்கான அறிவுரைகளை சமையல் எரிவாயு முகவர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

நகரத்துக்கு உள்ளேயே எரிவாயு இணைப்பை முகவரி மாற்றம் செய்ய விரும்பும் பயனாளிகள் இதர எரிவாயு இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்களுக்கு பின்பற்றப்படும் நடைமுறையை பின்பற்றலாம்.

ஒரு நகரத்தை விட்டு பிற பகுதிகளுக்கு செல்ல விரும்பும் இலவச எரிவாயு இணைப்பு பெற்ற பயனாளிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட நடைமுறைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளலாம். இந்த நடைமுறைகளைப் பின்பற்றி இலவச எரிவாயு இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்களும் நேரடி மானியத்தை பெற நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.