Pages

Thursday, January 15, 2015

"முழு ஈடுபாட்டுடன் கூடிய கடின முயற்சியாலேயே சாதனை மேற்கொள்ள முடியும்"

முழு ஈடுபாட்டுடன் கூடிய கடின முயற்சியாலேயே சாதனை நோக்கி வெற்றிப்பயணம் மேற்கொள்ள முடியும். இப்பயணத்தில், நாம் எடுக்கும் இடைவிடாத பயிற்சியே வெற்றிக்கான திறவுகோல் என்கிறார் ஒத்தக்கால்மண்டபம், அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார், 49.


சகோதரர்கள், வீட்டிற்கு அருகில் இருப்பவர்கள் என, விளையாட்டு வீரர்களை பார்த்து வளர்ந்ததே இத்துறையில் தன்னை ஈடுபடுத்தியதற்கான முதல் காரணம் என்று கூறும் இவர், தற்போது சாய்பாபா காலனியில் வசிக்கிறார். கூடைப்பந்தையும், தடகளப் போட்டிகளையும் இவர் அறிந்தது, வீட்டுக்கு அருகில் இருந்த காலியிடத்திலும், சி.எஸ்.ஐ, பள்ளி மைதானத்திலும்தான்.

சிட்டி மாநகராட்சி பள்ளியில், 1986ல் பள்ளிபடிப்பை முடித்த இவர், 1989ல் அரசு கலை, அறிவியல் கல்லூரியில், பி.ஏ (அரசியல் அறிவியல்) பாடப்பிரிவில் பட்டம் பெற்றார். 1991ல் மேட்டுப்பாளையம், ராமகிருஷ்ணா வித்யாலயா மாருதி உடற்கல்வியியல் கல்லூரியில், (பி.பிஎட்) இளங்கலை பட்டம் பெற்றார். பள்ளி, கல்லூரிகளுக்கிடையேயான, மாவட்ட, மாநில அளவிலான கூடைப்பந்து, தடகளம் போட்டியில் பரிசுகளையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

படிப்பை முடித்த இவர், 1991ல் சபர்பன் மெட்ரிக் பள்ளி, 1997ல் கற்பகம் கலை, அறிவியல் கல்லூரி ஆகியவற்றில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்தார். பணிபுரிந்த காலத்தில், எம்.ஏ., (அரசியல் அறிவியல், வரலாறு) எனும் தொலைதூர படிப்பையும், எம்.பில்., என்ற பகுதி நேர படிப்பையும் அண்ணாமலை பல்கலையில் முடித்து முதுநிலை பட்டத்தை பெற்றார். 2004ல் கருமத்தம்பட்டி, மேரிஸ் ஆசிரியர் பயிற்சி நிறுவன பயிற்சியாளராகவும் பணி புரிந்தார். 2005 ம் ஆண்டு, நெகமம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், உடற்கல்வி ஆசிரியராக ஓராண்டு பணி புரிந்தார்.

2006ம் ஆண்டு, ஒத்தக்கால்மண்டபம் அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியில் சேர்ந்தார். பாரதியார் பல்கலை, கூடைப்பந்து தேர்வாளர் சங்க உறுப்பினராக இருக்கும் இவர், தமிழ்நாடு கூடைப்பந்து நடுவர் மற்றும் தடகள நடுவராகவும் பணியாற்றியுள்ளார். இவரது பணி காலத்தில், மாவட்ட, மாநில, தேசிய போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்களை சாதிக்க வைத்து வருகிறார்.

தடகள பயிற்சியாளர் சிவக்குமார் கூறியதாவது: ஒருவரது கவனம் சிதறாத வண்ணம் இருந்தால்தான், அவர்கள் வாழ்வில் உயர முடியும். இது விளையாட்டு மட்டுமின்றி, அனைத்து துறைகளுக்கும் பொருந்தும். தற்போது, அரசு பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள், விளையாட்டுத்துறையினர் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர்.

அவர்களை வீரிய வித்துக்களாக மாற்றுவதற்கு, அரசின் உதவி தேவைப்படுகிறது. கிராம எல்லைக்குள் இருக்கும் பள்ளிக்கூடங்களில் சரியான விளையாட்டு சாதனங்கள் இல்லை. இம்மாணவர்கள் பயிற்சி எடுக்க நேரு விளையாட்டு மைதானத்திற்கு வரவேண்டியுள்ளது.

மாணவர்களின் நலனை கருதி, அரசு உபகரணங்கள் வாங்க உதவி செய்தால், அரசு பள்ளி மாணவர்களும் ஒலிம்பிக்கில் இடம் பெற முடியும். அரசு பள்ளி மாணவர்களையும், தேசிய, சர்வதேச போட்டிகளில் வெற்றிபெற வைப்பதே என் லட்சியம். இவ்வாறு சிவக்குமார் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.