Pages

Sunday, January 25, 2015

‘இளைஞர்களே... உங்கள் திறமை மீது ஒருபோதும் சந்தேகம் வேண்டாம்’: கலாம்

உங்கள் திறமை மீது ஒருபோதும் சந்தேகம் கொள்ள வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜெய்ப்பூரில் நடந்து வரும் இலக்கிய விழாவில் கலந்து கொண்டு பேசிய அப்துல் கலாம் இவ்வாறு பேசினார்.


கலாம் தனது அனுபவங்கள் குறித்து பேசியதாவது: நான் பைலட்டாக வேண்டும் என ஆசைப்பட்டேன். அதனால்தான் ஏரோனாட்டிக்கல் என்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்து படித்தேன். பைலட்டாக வருவதற்கு செலக்சன் பேனலுக்கு போன போது அங்கே 10 பேர் இருந்தார்கள். இருப்பது 9 சீட் மட்டுமே. கடைசியில் என்னை தான் கழற்றி விட்டார்கள்.

எனக்கு அப்போது மனமே உடைந்து விட்டது போலிருந்தது. ஆனால், என்னால் பைலட்டாக வரமுடியாமல் போனாலும், இந்த நாட்டுக்கே ஜனாதிபதியாக பின்னாளில் வந்துவிட்டேன்.

நான் ஜனாதிபதியானதும் விமானப்படை தளபதியிடம் எனக்கு விமானத்தில் பறக்க கற்று தருமாறு கேட்டுகொண்டேன். 6 மாதம் பயிற்சி எடுத்துக்கொண்டேன். இருந்தாலும் என்னால் பைலட்டாக முடியவில்லை என்றாலும் இன்று வரை என்னுடைய பறக்கும் கனவை நினைவாக்கி கொண்டுதான் இருக்கிறேன். இது எப்படி நடந்தது? நான் கனவு கண்டதால் நடந்தது. நான் பறக்க வேண்டும் என கனவு கண்டேன். அதனால் நடந்தது. என்னுடைய கனவுகள் எண்ணங்களானது. என் எண்ணங்கள் செயலாக மாறியது.

உங்கள் கனவுகள் நனவாக உங்களுக்கு நான் ஒரு மந்திரத்தை கொடுக்கிறேன்.. ’உங்கள் திறமையின் மீது ஒருபோதும் சந்தேகப்படாதீர்கள்’. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்தாலும் நான் கொடுத்த இந்த மந்திரத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எனக்கு என்ன கிடைக்கும் என்று எப்போதும் நினைக்காதீர்கள். அங்குதான் பிரச்சனைகள் தொடங்கிவிடுகின்றன. உலகிலேயே வாழ்வதற்கு சிறந்த நாடாக இந்தியாவை மாற்றுவோம் என உறுதியெடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.