Pages

Sunday, January 25, 2015

டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் பெறுவதில் சிக்கல்

ஆசிரியர் தகுதி தேர்வான டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்ற பலருக்கு, தேர்ச்சி சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு, 2013ல் நடந்தது. இதில், ’90 மதிப்பெண்ணுக்கு மேல், 60 சதவீதம் பெற்றவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’ என அறிவிக்கப்பட்டது.
இதன்பின், 82 மதிப்பெண் சலுகை மதிப்பெண்ணாக அறிவிக்கப்பட்டு, அவர்களும் தேர்ச்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்தனர். பெரும்பாலும் தனியார் பிரவுசிங் சென்டர்களுக்கு சென்று சான்றிதழ் பதிவிறக்கம் செய்தனர். 

அப்போது, இணையதளத்தில் தகவல்களை பதிவு செய்யும்போது ஏற்பட்ட ஒருசில தவறுகளால், பலருக்கு சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய முடியாமல் போனது. இதனால், டி.இ.டி., தேர்வு மதிப்பெண்ணை காட்டி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து, பலர் பணியில் சேர்ந்தனர். அவர்களுக்கு தற்போது டி.இ.டி., தேர்ச்சி சான்றை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, டி.ஆர்.பி.,க்கு பல புகார்கள் அனுப்பப்பட்டன.

மீண்டும் வாய்ப்பு:

இதன்பின் சான்றிதழ் பெறாதவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலம், ஜன., 19 முதல், பிப்., 14 வரை அச்சடிக்கப்பட்ட சான்றிதழ் வழங்க, டி.ஆர்.பி., ஏற்பாடு செய்தது. ஆனால், அதிலும் பலருக்கு சான்றிதழ் கிடைக்கவில்லை என புகார் வந்துள்ளது. 

இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது: டி.ஆர்.பி., இணையதளத்தில், ஒரு முறை மட்டுமே சான்றிதழை பதிவிறக்கம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்ற முறை பலர், தனியார் பிரவுசிங் சென்டர்களுக்கு சென்று பதிவிறக்கம் செய்தனர். தற்போது, டி.ஆர்.பி., அனுப்பிய சான்றிதழ்களில் அவர்களுக்கான சான்றிதழ் வரவில்லை. இணையதளத்தில் அவர்கள் விண்ணப்பித்தால், ’பதிவிறக்கம் செய்யப்பட்டது’ என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து டி.ஆர்.பி., கவனத்திற்கு கொண்டு செல்வோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

அச்சடிக்கப்பட்ட சான்றிதழ்:

பாதிக்கப்பட்ட தேர்வர் ஒருவர் கூறுகையில், ’டி.ஆர்.பி.,யின் ஒரு முறை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும் என்ற திட்டத்தால் தான், இந்த குழப்பம். 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் சான்று வழங்குவதுபோல் அச்சடிக்கப்பட்ட சான்றிதழ்களை அந்தந்த முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்தால் குழப்பம் ஏற்படாது’ என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.