தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவும், அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மதுரை ஆனந்தராஜ் தாக்கல் செய்த பொதுநல மனு: சமூகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் அங்கன்வாடி மையங்களில் படிக்கின்றனர். தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஏராளமான அங்கன்வாடி மையங்களில் தோழமை தொண்டு நிறுவனம் ஆய்வு செய்ததில், நிலைமை மோசமாக இருந்தது.
குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, காய்கறிகளின் தரம் குறைவாக உள்ளது. கழிப்பறை, மின்சாரம், குடிநீர் வசதி இல்லை. சமைக்குமிடம் நல்ல நிலையில் இல்லை. கட்டடங்கள் பழுதடைந்துள்ளன.
ஒரு குழந்தைக்கு காய்கறி வழங்க அரசு மிக மிக குறைந்தளவே பணம் ஒதுக்குகிறது. கழிப்பறை, மின்சாரம், சுத்தமான குடிநீர் உட்பட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். மத்திய, மாநில அரசுகள் கூடுதல் நிதி ஒதுக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டார்.
நீதிபதிகள் வி.தனபாலன், வி.எம்.வேலுமணி பெஞ்ச் விசாரித்தது. மனுதாரர் வக்கீல் அழகுமணி மற்றும் மத்திய அரசு வக்கீல் நாகராஜன், மாநில அரசு சிறப்பு வக்கீல் பாஸ்கரபாண்டியன் ஆஜராயினர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் (ஐ.சி.டி.எஸ்.,) இயக்குனர், "தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களை மேம்படுத்த பல திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது.
மூன்று முதல் ஐந்து வயது குழந்தைகளுக்கு தானிய பிஸ்கட், கூடுதல் ஊட்டச் சத்துக்கள் அடங்கிய உணவு, காய்ச்சிய குடிநீர் வழங்கப்படுகிறது. குறைபாடுகள் படிப்படியாக நிவர்த்தி செய்யப்படும்" என பதில் மனு செய்தார்.
நீதிபதிகள்: அங்கன்வாடி மையங்களில் கழிப்பறை வசதி இல்லாததால் குழந்தைகள் வருகை குறைந்துள்ளது. உடனடியாக கழிப்பறை வசதி செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அங்கன்வாடி மையங்கள், அவற்றில் உள்ள வசதிகள் பற்றி ஐ.சி.டி.எஸ்., இணையதளத்தில் வெளியிட வேண்டும். மையங்களில் தண்ணீர் வசதியுடன் கழிப்பறைகள் அமைக்க வேண்டும்.
அவற்றை சுத்தம் செய்ய பணியாளர்களை நியமிக்க வேண்டும். தரமான உணவு, ஊட்டச்சத்து பானம் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோருகிறார்.
இதில் முடிவெடுப்பது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கையில் உள்ளது. மனுவை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். குறைபாடுகளை களைவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் வசதிகளை நிறைவேற்ற எவ்வளவு கால அவகாசம் தேவை என்பது பற்றி அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.