Pages

Tuesday, January 27, 2015

பிளஸ் 2 தேர்வர்கள் 75% வருகைப் பதிவு வைத்திருந்தால் செய்முறைத் தேர்வில் தேர்ச்சி!

பிளஸ் 2 தேர்வர்கள், பள்ளிக்கு, 75 சதவீத வருகை பதிவு வைத்திருந்தால், அவர்களை, செய்முறை தேர்வில் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் செய்முறை தேர்வை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.


மார்ச்சில்...

பிளஸ் 2 மற்றும் 10 ம் வகுப்பு மாணவருக்கான, 2014 - 15ம் கல்வியாண்டு பொதுத்தேர்வு, வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கிறது. பொதுத்தேர்வு மாணவருக்கான செய்முறை தேர்வு (பிராக்டிக்கல்) நடத்தப்படும். பிளஸ் 2 மாணவருக்கு, இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், தொழிற்கல்வி பாடங்கள் உள்ளிட்டவைக்கு செய்முறை தேர்வு நடத்தப்படும். வரும் பிப்ரவரி முதல் வாரத்தில், செய்முறை தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை, தேர்வுத்துறை செய்து வருகிறது.

பிளஸ் 2 தேர்வருக்கு, மொத்தமுள்ள 200 மதிப்பெண்ணில், 150 மதிப்பெண் எழுத்து தேர்வாகவும், 50 மதிப்பெண் செய்முறை தேர்வாகவும் இருக்கும். அதில், செய்முறை தேர்வில் மட்டும், 30 மதிப்பெண் புறமதிப்பீட்டுக்கும், 20 மதிப்பெண் அக மதிப்பீட்டுக்கும் பிரித்து, மொத்தம், 50 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

அக மற்றும் புறமதிப்பீடு மதிப்பெண் சேர்த்து, 50க்கு, 40 மதிப்பெண் எடுத்தால்தான், செய்முறை தேர்வில் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்கப்படும். அவ்வாறு, 40 மதிப்பெண் செய்முறை தேர்வில் பெறாத மாணவர், செய்முறையில் தேர்ச்சி அடையாதவராகவே கருதப்படுவார். அவர் எழுத்துத்தேர்வில், 150க்கு 150 மதிப்பெண் பெற்றாலும், சம்பந்தப்பட்ட பாடத்தில் தேர்ச்சி அடையாதவராகவே அறிவிக்கப்படுவார்.

அதனால், செய்முறை தேர்வு என்பது முக்கியம். மேலும் 150 மதிப்பெண்ணுக்கான எழுத்துத் தேர்வில், 30 மதிப்பெண் எடுத்தாலே, செய்முறை தேர்வில் எடுத்த, குறைந்தபட்ச 40 மதிப்பெண் சேர்ந்து, மொத்தம் 70 மதிப்பெண்ணாக கணக்கிடப்பட்டு, தேர்ச்சியடைந்து விடலாம். செய்முறை தேர்வில், பெரும்பாலும் மாணவரின் நன்னடத்தை, வருகைப் பதிவு, செய்முறை தேர்வு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, மதிப்பெண் வழங்கப்படுகிறது.

பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளி கள், செய்முறை தேர்வில் முழு மதிப்பெண் வழங்கி, பள்ளியின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கையை மேற்கொள்கின்றன. இந்நிலையில், அரசுப்பள்ளி மாணவர்கள், வருகைப்பதிவு மற்றும் ஓரளவு செய்முறை தேர்வை எதிர்கொண்டாலே, அவரை, பாஸ் (தேர்ச்சி) செய்துவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரு மாதங்கள்...

கல்வி அதிகாரிகள் கூறியதாவது: பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள், 75 சதவீத வருகைப்பதிவை பூர்த்தி செய்திருந்தால், செய்முறை தேர்வில், 50க்கு, 40 மதிப்பெண் வழங்கி, பாஸ் மார்க் போடப்படும். கடைசி இரண்டு மாதங்கள், முறையாக பள்ளிக்கு வந்து, பயிற்சி தேர்வுகளை எழுதியிருந்தாலும், மதிப்பெண் வழங்கப்படும். இருந்தாலும், செய்முறைத்தேர்வில், மாணவர் தனது பங்களிப்பை முறையாக செய்திருக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.