Pages

Friday, December 26, 2014

இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மைய சேர்க்கைத் தேர்வில் கலந்துகொள்ள...

இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில், சேர்க்கைக்கான தேர்வில் கலந்துகொள்ள, வீரர், வீராங்கனைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசின் திறன் மேம்படுத்தல் தொழில் முயல்வோர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் சென்னையில், இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உதவியுடன் செயல்படுகிறது. பயிற்சி மையத்தில், கூடுதல் வசதியுடன், விஞ்ஞான பூர்வமான பயிற்சி அளிக்கப்பட்டு, தமிழ்நாடு விளையாட்டு வீரர்களின் தரத்தை உயர்த்துகிறது.

தற்போது, தகுதியுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகளிடமிருந்து, சேர்க்கை தேர்வில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண்களுக்கான வாலிபால் போட்டிக்கு, தங்கும் வசதியில்லா பயிற்சியும், கால்பந்து போட்டிக்கு, தங்கும் வசதியுடன் மற்றும் தங்கும் வசதியில்லா பயிற்சியும், ஆண்கள், பெண்களுக்கான கபடி, ஹாக்கி போட்டிக்கு, தங்கும் வசதியுடன் கூடிய பயிற்சி மற்றும் தங்கும் வசதியில்லா பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

விண்ணப்பதாரர், தேசிய, மண்டல, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றவர்களாக இருக்க வேண்டும். அணி விளையாட்டுக்கு, 2013 - 2014, 2014 - 2015 ஆண்டுகளில் நடந்த அனைத்து விளையாட்டு போட்டிகளின் அணிகளில், தேசிய, மாநில அளவில் பங்கேற்று, முதல் மூன்று இடங்களைப் பெற்ற வீரர்களாக இருக்க வேண்டும்.

கடந்த, 2013 - 2014, 2014 - 2015ம் ஆண்டுகளில் நடந்த அனைத்து விளையாட்டு அணிகளில், மாவட்ட அளவிலான முதல் இரண்டு இடங்களைப் பெற்ற வீரர்கள் மற்றும் மாவட்ட அளவில் கலந்து கொண்டவர்களில், தனிச்சிறப்பு தகுதி உடையவர்களும் (மிகச் சிறந்த உயரம் உள்ள மாணவர் மற்றும் மாணவியர்) விண்ணப்பிக்கலாம்.

வரும் 2015 ஏப்., முதல் தேதி,12 வயதிலிருந்து 17 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில் சேர்க்கப்படும் வீரர், வீராங்கனைகளுக்கு, தகுதி மற்றும் அனுபவம் நிறைந்த பயிற்றுநர்கள் மூலம், தினமும் திட்டமிட்ட விஞ்ஞானரீதியான பயிற்சி அளிக்கப்படும். பள்ளி மற்றும் கல்லுாரிகளில் சேர்வதற்கான உதவி செய்யப்படும்.


விடுதிகளில் தங்கி பயிற்சி பெறுவோருக்கு, இலவச உணவும், விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்படும். மாதம் ரூ.600 வீதம், 10 மாதங்களுக்கு ஊட்டச்சத்துக்காக வழங்கப்படும். தகுதியுடைய மாணவர் மற்றும் மாணவியர் மட்டும் தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவர். 
தகுதி தேர்வு நடக்கும் விளையாட்டு வீரர்களுக்கு, தங்கும் வசதி, உணவுப்படி மற்றும் பயணப்படி வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



விளையாட்டு மற்றும் வயது நிரூபண சான்றிதழ்கள், அரசு மருத்துவர்களால் வழங்கப்பட்ட மருத்துவ சான்றிதழ், ரேஷன் கார்டு நகல், மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், பள்ளி முதல்வர் அல்லது விடுதி காப்பாளரிடமிருந்து பெற்ற நன்னடத்தை சான்றிதழ் நகல்களை, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து, கையெழுத்துடன் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை, இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையம், 55, ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம், சென்னை - 3 என்ற முகவரிக்கு, வரும் ஜன., 5க்குள் அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.