Pages

Friday, December 5, 2014

மாணவர்களின் பெற்றோர் உயிரிழக்க நேரிட்டால் அரசு வழங்கும் நிதியுதவி அதிகரிப்பு

பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரின் குடும்பத்தில் வருவாய் ஈட்டும் நபர் உயிரிழந்தால் வழங்கப்படும் நிதியை ரூ.75 ஆயிரமாக அதிகரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்:

சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மாணவர்களின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்துவிட்டாலோ, நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, வருவாயின்மை காரணமாக கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்படும் சமயத்தில், அவர்களது குழந்தைகள் தொடர்ந்து கல்வி கற்கும் வகையில் நிதி வழங்கப்படுகிறது.
1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் நிதியை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஆணையிடப்படுகிறது. இந்த நிதி அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டு, அதில் இருந்து கிடைக்கிற வட்டித் தொகை, முதிர்வுத் தொகை ஆகியவை அந்த மாணவ, மாணவியரின் கல்விச் செலவுக்காகவும், பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்பட வேண்டும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்திட தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய ஏதுவாக உரிய கருத்துருக்களை பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.