கிறிஸ்துமஸ் நாளன்று வழக்கம்போல் விடுமுறைதான் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. வரும் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாது என்றும் அன்றைய தினம் ”நல்லாட்சி நாள் " என்று கடைபிடிக்கப் பட வேண்டும் என்று பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக வெளியான செய்திகளின் அடிப்படையில், எதிர்க்கட்சிகள் இன்று மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டன.
இந்த விவகாரத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் எழுப்பினர். இதையடுத்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, ”இந்த தகவல் முற்றிலும் தவறானது. இது போன்ற எந்த சுற்றறிக்கையும் அனுப்பப் படவில்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி என்னிடம் தெரிவித்தார். எந்த பள்ளிகளும் அன்று இயங்காது. ஆன்லைன் மூலமாக கட்டுரை போட்டிகள் மட்டுமே நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் மட்டும் இதில் பங்கேற்கலாம். அவ்வளவுதான்” என்று தெரிவித்தார்.
இதனிடையே, எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் விடுமுறை பற்றி அரசின் உத்தரவு குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
முன்னதாக இது குறித்து விளக்கம் அளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்றும், கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையுடன் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும் என்றும், பத்திரிகைகளில் வெளியான செய்தி ஆதாரமற்றது என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.