மாணவர்கள் மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே திறமை அல்ல என்பதை அவர்களுக்கு ஆசிரியர்கள் உணர வைக்க வேண்டும் என்று, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை கூறினார்.
மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவது, புதிய கற்றல் யுக்திகளை ஆசிரியர்களுக்கு கற்பிப்பது, புதிய கற்றல் - கற்பித்தல் திட்டங்களை வகுப்பது, பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெறும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரிசளித்துப் பாராட்டுவது போன்ற நோக்கங்களுக்காக மாவட்டங்கள்தோறும் தனியார் பள்ளிகளை ஒருங்கிணைத்து மெட்ரிக் பள்ளிகளின் கல்விக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற தனியார் பள்ளி மாணவ-மாணவிகள், பள்ளி நிர்வாகங்களுக்கு விருது வழங்கும் விழா கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது. கோவை மாவட்ட மெட்ரிக் பள்ளிகளின் கல்விக் குழு சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.ஞானகெளரி முன்னிலை வகித்தார்.
விழாவில் கலந்து கொண்டு தனியார் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் பேசியது:
கற்பித்தலை பிரதானப் பணியாகக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள், தங்களிடம் பயிலும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதை மட்டுமே பிரதானமாகக் கொள்ளாமல், தாம் கற்பிப்பதை மாணவர்கள் கற்றுக் கொள்கின்றனரா என்பதை அறிந்து கொள்வதும் அவசியம். அண்மைக் காலமாக குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் அனைவரும் படித்தவர்களாகவே இருக்கின்றனர். எனவே, மாணவர்களை இந்தச் சமுதாயத்தில் நல்லவர்களாக, வாழ்வதற்கு தகுதி உடையவர்களாக மாற்றுவதுடன் நற்பண்புகள் கொண்டவர்களாகவும் உருவாக்க வேண்டும். வெறும் மதிப்பெண்களைப் பெறுவது மட்டுமே திறமை அல்ல என்பதை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும். ஒவ்வொரு மாணவரிடமும் ஓர் உள்ளார்ந்த தனித்திறன் ஒளிந்து கிடக்கும். அதைக் கண்டுபிடித்து மெருகேற்றுவதுடன், நற்பண்பு, ஒழுக்கத்தைக் கற்பித்து கலாசாரத்தை வளர்க்கக் கூடியவர்களாக அவர்களை மாற்ற வேண்டும். இதற்காக அவர்களிடம் ஆசிரியர் என்ற முறையில் அணுகாமல், நண்பர்களாகப் பாவித்து அணுகினால் நல்ல பலன் கிடைக்கும். ஆசிரியர்கள் பாட நூல் அறிவுடன் தற்கால அறிவியல் தொழில்நுட்ப அறிவையும் பெற்றிருக்க வேண்டும் என்றார் அவர்.
மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் (பொறுப்பு) என்.சந்திரன், கல்விக் குழு ஒருங்கிணைப்பாளர் பி.வி.அந்தோணி, செயலர் ஹெச்.ஹாஜா ஷெரீப், பொருளாளர் பி.ஆரோக்கிய தடாயுஸ், பல்வேறு பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
Good afternoon friends. What are the courses BT assistant has to Study to get second incentive? Please reply friends!
ReplyDelete