நாடெங்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்களும், கற்பழிப்புகளும்.., குறிப்பாக ஓடும் கார், டாக்சி போன்ற வாகனங்களுக்குள் இளம் பெண்கள் கற்பழிக்கப்படும் சம்பவங்களும் பெருகிக் கொண்டே வரும் சூழலில் கேரளாவில் பெண்களுக்காக பெண்களே ஓட்டும் ’ஷி டாக்சி’ சேவை அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
நாட்டிலேயே முதல் முறையாக பெண்களுக்கான 24x7 டாக்சி சேவையான ’ஷி டாக்சி’, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரை சுமார் 20 ஆயிரம் பெண் பயணிகளை பாதுகாப்பாக அழைத்துச் சென்று சேர்த்துள்ளது.
முதல் கட்டமாக தலைநகர் திருவனந்தபுரம் மற்றும் கொச்சி நகரில் 40 ‘ஷி டாக்சி’க்கள் இயங்குகின்றன. இதில் ஓட்டுனர்களாக பணியாற்றும் படித்த பெண்கள், கராத்தே, ஜூடோ மற்றும் களறி உள்ளிட்ட தற்காப்புக் கலைகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த டாக்சிகளில் நவீன ரக தகவல் தொடர்பு சாதனங்களும், ‘ஜி.பி.எஸ். டிராக்கர்’ போன்ற கருவிகளும், அபாய எச்சரிக்கை சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளன.
மாதமொன்றுக்கு சுமார் 25 ஆயிரம் வரை இந்த பெண் டிரைவர்கள் சம்பாதிக்கின்றனர். வாடிக்கையாளர்களை ஏற்றிச் செல்வதன் மூலம் கிடைக்கும் வருமானம் நீங்கலாக இந்த டாக்சிகளின் மேல்புறத்தில் பிரபல வணிக நிறுவனங்களின் விளம்பரங்களும் இடம் பெறுவதால் இந்த டாக்சி சேவையை வெற்றிகரமாக இயக்க முடிவதாக ‘ஷி டாக்சி’ நிர்வாகிகளான ‘ஜெண்டர் பார்க்’ தொண்டு நிறுவனத்தினர் கூறுகின்றனர்.
இரவு எந்நேரமாக இருந்தாலும், எந்த இடத்தில் இருந்து போன் செய்து அழைத்தாலும், அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் வீட்டு வாசலில் எங்கள் ‘ஷி டாக்சி’ நிற்கும் என்று அவர்கள் பெருமையுடன் குறிப்பிடுகின்றனர். அடுத்த மாதத்துக்குள கோழிக்கோடு நகரிலும் 10 ‘ஷி டாக்சி’க்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பெரிய சிறப்பம்சம் என்னவென்றால், இந்த பெண் டிரைவர்களில் யாரும் கூலிக்கு கார் ஓட்டுபவர்கள் அல்ல. ‘ஜெண்டர் பார்க்’ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் குறைந்த முன்பணம் செலுத்தி இந்த கார்களை வங்கியில் இருந்து கடனாக பெற்றுள்ளனர். கடன் தவணை முழுவதும் முடிந்த பின்னர், அந்த கார்கள் ஓட்டுனர்களுக்கே சொந்தமாகி விடும்.
இதே போன்றதொரு பெண்களுக்கான சிறப்பு டாக்சி சேவையை சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பெருநகரங்களிலும் இயக்கினால் இங்கெல்லாம் நடைபெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஓரளவுக்காவது குறையலாம் என்ற எண்ணம் ஏற்படும் அளவுக்கு கேரளாவில் இந்த டாக்சி சேவை பெரும் வெற்றி கண்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.