Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, December 1, 2014

    "கணிதத்தில் சென்டம் அடிக்க 1 மதிப்பெண் வினாக்களில் கவனம் தேவை"


    கணிதப் பாடத்தில் சென்டம் எடுக்க பல மாணவர்கள் முயற்சிக்கின்றனர். அவர்களின் ஆசை நிறைவேற வேண்டுமெனில், 1 மதிப்பெண் வினாக்களில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் ஆலோசனை வழங்கப்பட்டது.


    கோவையில், தினமலர் - ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சியில், முதல் நாளான நேற்று, காலையில் நடந்த முதல் அமர்வில், கோவை சர்வஜனா பள்ளியில் இருந்து, தமிழ் பாடம் குறித்து பங்கஜம்மாள், ஆங்கிலம் குறித்து மெஹர்நிஷா, கணிதம் குறித்து ஸ்ரீவித்யா, அறிவியல் குறித்து மீனாலோசனி, சமூக அறிவியல் குறித்து மஞ்சுளா ஆகியோர் பேசினர்.

    இரண்டாவது அமர்வில், ஆங்கில வழி மாணவர்களுக்கு எஸ்.பி.ஓ.ஏ., பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் அன்வர் பாட்ஷா (தமிழ்), ஷோபா (ஆங்கிலம்), லதா மணி (கணிதம்), கீதா மோகன் (உயிரியல்), கிருஷ்ணவேணி (வேதியியல் மற்றும் இயற்பியல்), ஜெயந்தி வாசன் (வரலாறு), ஜெயந்தி நாயகம் (புவியியல்) ஆகியோர் பேசினர்.

    ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வழங்கிய ஆலோசனைகள்:

    தமிழில் இல்லை தடுமாற்றம்

    பங்கஜம்மாள் (தமிழ்): தமிழ் பாடத்தில், மதிப்பெண் எடுப்பது மிகவும் சுலபம். பிற பாடங்களை போல், மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கருவை புரிந்து கொண்டாலே போதும்; மனப்பாடம் செய்யாமல் மதிப்பெண்களை எளிதாக பெறலாம். தமிழ் பாடத்தில், முதல் தாளை பொறுத்தவரை, அனைத்துமே புத்தகத்தில் உள்ளதை படித்து எழுதினால் போதுமானது.

    மாணவர்கள் மனப்பாடப்பகுதியில் தான் சற்று தடுமாறுவது உண்டு. மனப்பாடப்பகுதிக்கு சிறப்புக் கவனம் செலுத்தி படித்தால், சுலபமாக அதிக மதிப்பெண்களை பெறலாம். எழுத்துப்பிழை, ஒற்றுப்பிழை மற்றும் அடித்தல் - திருத்தம் செய்யாமல், வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை இடம் விட்டு தெளிவாக எழுத வேண்டும்.

    தமிழ் இரண்டாம் தாளை எடுத்துக்கொண்டால், இலக்கண வினாக்கள் மற்றும் அணியைத் தவிர, அனைத்துமே வகுப்பறையில் கவனித்ததை எழுதினால் போதுமானது. படித்து மனப்பாடம் செய்வதற்கு இரண்டாம் தாளில் எதுவும் இல்லை. பழைய பொதுத்தேர்வு வினாத்தாள்களை படித்து பயிற்சி செய்தாலே, தமிழ் பாடத்தில், தடுமாற்றம் இல்லாமல், சுலபமாக அதிக மதிப்பெண் பெற்றுவிடலாம்.

    ஆங்கிலத்தை அடிமையாக்குங்கள்!

    மெஹர்நிஷா (ஆங்கிலம்): பொதுவாகவே, தமிழ் வழிக்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம் சற்று கடினமாக தான் இருக்கும். ஆனால், உண்மையிலேயே ஆங்கிலம் கடினம் அல்ல. பழக்கத்தால் ஆங்கிலத்தை அடிமையாக்கி விடலாம், என்பதை மாணவர்கள் முதலில் புரிந்து, பயத்தை தவிர்க்க வேண்டும். ஆங்கிலம் முதல் தாளை பொறுத்தவரை, 35 மதிப்பெண் மட்டுமே கேள்வி பதில்களுக்கும், மனப்பாட பகுதிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    மீதம் உள்ள 65 மதிப்பெண்களுமே இலக்கண பகுதிக்குதான் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு தான் மாணவர்கள் அதிக பயிற்சி எடுக்க வேண்டும். முதலில் இலக்கணத்தில், எந்தெந்த பகுதிக்கு எவ்வளவு மதிப்பெண் என்பதை அறிந்து, தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டாம் தாளை பொறுத்த வரை சற்று பின்தங்கிய நிலையில் படிக்கும் மாணவர்கள் கட்டுரைப் பகுதியில் அதிக கவனம் செலுத்தினால், குறைந்தபட்ச மதிப்பெண்களை சுலபமாக பெற்று விடலாம்.

    ஆங்கிலத்திற்கு பிற பாடங்களை போல் அதிக நேரம் ஒதுக்கவேண்டிய அவசியமில்லை. பொதுவாக ஆங்கிலம் இரண்டு தாள்களிலும் இலக்கணப்பிழை தவிர்க்கும் பட்சத்தில், அதிக மதிப்பெண்களை சுலபமாக பெறலாம்.

    ஒரு மதிப்பெண் வினாவில் கவனம்

    லதா மணி (கணிதம்): மாணவர்கள் கணிதத்தில் பெரும்பாலும், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் வாங்குவதற்குதான் முயற்சிப்பர். கணிதத்தை பொறுத்தவரை, குறைந்தபட்ச மதிப்பெண் பெறுவது மிகவும் சுலபம். படிப்பில் சற்று பின் தங்கிய மாணவர்கள் செட்ஸ், மேட்ரீசஸ், மற்றும் பிராபபிலிட்டி ஆகிய தொகுப்புகளை படித்தாலே குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று விடலாம். இதற்கு மேலாக நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற வேண்டும் என முயற்சிக்கும் மாணவர்கள் ஒரு மதிப்பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

    பெரும்பாலும், கணிதத்தில் சதம் பெறும் வாய்பை தவறவிடும் மாணவர்கள் ஒரு மதிப்பெண்களில்தான், மதிப்பெண் இழக்கின்றனர். இதை தவிர, கணிதம் மற்ற பாடங்களை போல் மனப்பாடம் செய்து எழுதிட முடியாது. நுாறு முறை ஒரு கேள்வி பதிலை பார்த்தாலும், முதல் முறை பார்ப்பது போல்தான் இருக்கும். எனவே, மாணவர்கள் கணக்குகளை போட்டு பார்த்தல் மிகவும் அவசியம்.

    ஆர்வம் இருந்தால் அறிவியல் எளிது!

    மீனாலோசனி (உயிரியல்): அறிவியல் என்பது புதிதாக ஒன்றும் இல்லை. புரிந்து படிக்கும் பட்சத்தில் முழு மதிப்பெண் எடுப்பது மிக சுலபம். அறிவியல் பாடத்தின் மீது ஆர்வத்தை அதிகரித்துக்கொள்வது அவசியம். உயிரியல் பிரிவில், படங்கள் மட்டும் ஒன்பது மதிப்பெண்களுக்கு கேட்கப்படுகிறது. இதனால், படங்களை தெளிவாக வரைந்து பாகங்களை குறிப்பது அவசியம். படங்களை மீண்டும் மீண்டும், வரைந்து பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். 100 மதிப்பெண்களை நோக்கி, பயணிக்கும் மாணவர்கள் பயிற்சி வினாக்களை நன்கு தயார்படுத்திக் கொள்வது அவசியம்.

    பிற பாடங்கள் போன்று அல்லாமல், அறிவியல் பாடத்தை, 75 மதிப்பெண்களுக்கு மட்டுமே மாணவர்கள் எழுதுகின்றனர். இதனால், நிதானமாக கேள்விகளை தேர்வு செய்து எழுத வேண்டும். பதட்டம், அவசரம் தேவையில்லை. கேள்விக்கான பதில்களை தெளிவாக எழுதுவது அவசியம். கேள்வி எண் மற்றும் உட்பிரிவு வரிசையை தவறாமல் எழுதுவது மதிப்பெண்களை இழக்காமல் இருக்க வகைசெய்யும். தேர்வு அறைக்குள் நுழைந்தவுடன் கவனம் முழுவதும், தேர்வில் மட்டுமே இருக்கவேண்டும். ஆர்வத்துடன் புரிந்து படித்தால், அறிவியல் பாடத்தில், முழு மதிப்பெண் பெறுவது என்பது எளிது.

    வரலாற்று சம்பவங்களை தொடர்புபடுத்தி படியுங்கள்!

    மஞ்சுளா (சமூக அறிவியல்): சமூக அறிவியல் பாடம் மிகவும் எளிமையானது. கண்ணை மூடிக்கொண்டு மனப்பாடம் செய்வதை விட, நிகழ்ச்சிகளுடன் தொடர்புபடுத்தி படித்தால், எளிதாக நினைவுபடுத்திக் கொள்ளலாம். கேள்விக்கான பதில்களை, இடைவெளி விட்டு எழுதவேண்டும். பத்து மதிப்பெண் வினாக்களுக்கு, கட்டுரை போன்று தொடர்ந்து எழுதாமல், உள் தலைப்புகளால் பதில்களை தெளிவுபடுத்தி காண்பிக்க வேண்டும்.

    காலக்கோடு, வரைபடம் ஆகியவற்றில் எளிதாக முழு மதிப்பெண் பெறலாம். அதிகப்படியான பயிற்சி இருந்தால் போதுமானது. காலக்கோடு கேள்விக்கு பதிலளிக்கும்போது, ஆண்டுகளுடன் கட்டாயம் நிகழ்வுகளையும் குறிப்பிடவேண்டும். வரைபடத்தை பொறுத்த வரை, பென்சிலால் குறித்தால் போதுமானது; வண்ணங்கள் தீட்ட வேண்டாம். வரைபடங்களை பொறுத்தவரை, அடித்தல் திருத்தல் மதிப்பெண்களை குறைத்துவிடும் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

    நாங்கள் படிக்கும் போது இவ்வாய்ப்பு இல்லையே!

    ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி குறித்து பெற்றோர் கருத்து:

    குணசேகரன்: என் மகளுக்காக, இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளேன். நாங்கள் படிக்கும்போது இதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த வாய்பை மாணவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வகுப்பறை தாண்டி, பல்வேறு டிப்ஸ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    நீலாகிருஷ்ணன்: எப்படி படிக்கவேண்டும் என்பது தெளிவாக புரிந்துள்ளது. வகுப்பறை பாட ஆசிரியர் நடத்துவதை தாண்டி, புதிதாக ஒருவர் புதிய வழியில் கற்றுத்தருவது மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும். இந்நிகழ்ச்சிக்கு, இவ்வளவு மாணவர்கள் வருவார்கள் என்று எண்ணவில்லை. நாங்கள் முன்னதாக வந்ததால், அமர இடம் கிடைத்தது. இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த, தினமலர் நாளிதழுக்கு நன்றி.

    திட்டமிட்டு படிக்க உதவியாக இருக்கும்!

    ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி குறித்து மாணவர் கருத்து:

    அரவிந்தன்: சமூக அறிவியல் பாடத்தில் வரைபடம், காலக்கோடு சார்ந்த பல தகவல்களை புரிந்துகொண்டேன். ஒவ்வொரு பாடத்திற்கும் தேர்வில், நேரம் எவ்வாறு ஒதுக்கவேண்டும் என்று தெளிவாக விளக்கம் கிடைத்தது. கணித பாடத்தில் மதிப்பெண் மதிப்பீடு தெரிந்ததால், திட்டமிட்டு படிக்க உதவியாக இருக்கும்.

    காவியா: தினமலர் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எளிதாக மதிப்பெண் பெறுவது எப்படி, என்று ஆசிரியர்கள் கற்று கொடுத்தனர். இதனால், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பேன் என்ற நம்பிக்கை வந்துள்ளது.

    ஹேமா சோபிகா: நிகழ்ச்சிக்கு காலை 9 மணிக்கே வந்துவிட்டேன். இங்கு, எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டி புத்தகம் மிகவும் உதவியாக உள்ளது. இப்புத்தகத்தில் ப்ளூ பிரிண்ட் உள்ளது. இதன் உதவியோடு, நாங்கள் ஒவ்வொரு பாடத்தையும் திட்டமிட்டு படிப்போம். கடந்த ஆண்டு வெற்றிபெற்ற மாணவர்களை பார்த்தோம். அவர்களை போல் நாங்களும் இந்த மேடையில் பரிசு பெற வேண்டும் என்ற ஆர்வம் வந்துள்ளது.

    ரம்யா: ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில், ஒரே இடத்தில் ஐந்து பாடத்தின் ஆசிரியர்கள் ஒன்றாக இருந்து எங்களுக்கு டிப்ஸ் கொடுப்பது பயனுள்ளதாக இருந்தது. நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையும், உற்சாகமும் வந்துள்ளது.

    திவ்யா: எங்களுக்கு படிப்பில், எப்படி சிறந்து விளங்குவது என்பது மட்டும் அல்லாமல், நாங்கள் தேர்வு காலத்தில் உடலை எப்படி பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற புத்தகமும் கொடுத்துள்ளனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், எங்களுக்கே தெரியாத அளவுக்கு ஒரு தன்னம்பிக்கை வந்துள்ளது. கணிதம் எவ்வளவு எளிமையானது என்பதையும் இங்கு வந்த பின்னரே உணர்ந்தேன்.

    No comments: