Pages

Saturday, November 15, 2014

TNPSC : ஆன் - லைன் வழி தேர்வு திட்டம்: ரத்து செய்ய தேர்வாணையம் முடிவு

கடந்த 8ம் தேதி, 'ஆன் - லைன்' வழியில் நடந்த குரூப் 2 முதன்மை தேர்வில், பெரும் குளறுபடி ஏற்பட்டதன் எதிரொலியாக, ஆன்-லைன் வழி தேர்வை ரத்து செய்ய, அரசுப் பணியாளர் தேர்வாணையமான,

டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது.

தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர், நட்ராஜ், ஆன்-லைன் வழி தேர்வை அமல்படுத்தினார். குறைந்த தேர்வர்கள் பங்கேற்கும் தேர்வில் மட்டும், புதிய திட்டத்தை அமல்படுத்தினார். இந்த வகை தேர்வு, தேர்வாணைய அலுவலகத்தில் மட்டும் நடந்து வந்தது. இதனால், எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. கடந்த 8ம் தேதி, குரூப் 2 முதன்மைத் தேர்வு, மாநிலம் முழுவதும், 44க்கும் மேற்பட்ட மையங்களில் நடந்தது. 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த தேர்வு, இரு தாள்களாக நடத்தப்பட்டது. காலையில், ஆன்-லைன் வழியிலான தேர்வும், பிற்பகலில், விரிவாக விடை அளித்தல் முறையிலான தேர்வும் நடந்தது

இதில், ஆன்-லைன் வழியிலான தேர்வில், பெரும் குளறுபடி ஏற்பட்டது. பல இடங்களில் மின்சாரம் இல்லாததாலும், சில மையங்களில், 'சர்வர்' முடங்கியதாலும், குறித்த நேரத்தில், தேர்வு துவங்கவில்லை. மறைமலை நகர் அருகே உள்ள ஒரு மையத்தில், ஒரு அறையில், 'சர்வர்' கோளாறால், தேர்வெழுத முடியாத 43 தேர்வர்கள், போராட்டம் நடத்தினர். கடைசியில், இவர்களுக்கு, மறுநாள் புதிய தேர்வு நடத்தப்பட்டது. சென்னை செங்குன்றத்தில் அமைக்கப்பட்ட மையத்திலும், 'சர்வர்' பிரச்னை ஏற்பட்டது. இப்படி, பல மையங்களில் குளறுபடி ஏற்பட்டதன் காரணமாக, ஆன்-லைன் வழி தேர்வு, தேவைதானா என, தேர்வாணையம் ஆலோசித்து வருகிறது. மின்சார பிரச்னையையும், தொழில்நுட்ப பிரச்னையை யும், தவிர்க்க முடியாது என்பதால், ஆன்-லைன் வழி தேர்வை ரத்து செய்ய, தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. இது குறித்து, விரைவில், 'போர்டு' கூட்டத்தில் ஆலோசித்து, முடிவு எடுக்கப்பட உள்ளது.

சரியாக திட்டமிடாததால் தோல்வியில் முடிந்த திட்டம்: பெரிய அளவில் நடத்தப்படும் எந்தத் திட்டத்தையும், அரசு அதிகாரிகள் திறம்படக் கையாள்வதில்லை என்ற குற்றச்சாட்டு, அடிக்கடி எழுகிறது. அரசு செயல்படுத்தும் இலவச திருமணமானாலும், நலத் திட்ட உதவிகளானாலும், எப்போதும் குழப்பமே மிஞ்சுகிறது. தாலிக்குத் தங்கம் திட்டத்தில் கூட, பயனாளிகளுக்கு, திருமணமாகி, குழந்தை பிறந்த பிறகே, அரசின் தங்கத் தாலி கொடுக்கப்படுகிறது. டி.என்.பி.எஸ்.சி., தேர்வில், அதிக அளவில் தேர்வர்கள் கலந்து கொள்வர் என்பது, அரசு அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிந்தும், போதுமான அளவு ஏற்பாடுகள் செய்திருக்கவில்லை. தேர்வு மையங்களைத் தேர்ந்தெடுக்கும்போதே, அவற்றில், மின் வசதி, கம்ப்யூட்டர் சர்வர் வசதிகள் உள்ளனவா என்பதைச் சரிபார்க்க வேண்டியது, தேர்வு நடத்தும் அமைப்பின் கடமை. 'ஏற்பாடுகளை துல்லியமாகச் செய்யாமல், மேம்போக்காக கடமையாற்றும் அதிகாரிகளின் போக்கே, இத்தகைய குழப்பங்களுக்குக் காரணம்' என, தேர்வர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.