Pages

Thursday, November 27, 2014

"சாதாரண குடும்பத்தில் பிறந்த நம்மால், அது முடியுமா என்ற தாழ்வு மனப்பான்மை வேண்டாம்"

தினமலர் டி.வி.ஆர்., அகாடமி வழங்கிய, ஜெயித்துக் காட்டுவோம் காலை நிகழ்ச்சியில், கல்வி ஆலோசகர், ரமேஷ் பிரபா பேசியதாவது: மாணவர்களே, நீங்கள் (மாநகராட்சி பள்ளி மாணவர்கள்) யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல. உங்களால் எல்லாம் முடியும். இந்த நிகழ்ச்சி, 32 மாவட்டங்களிலும் நடக்கிறது. ஆனால், இங்கு தான், மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்காக ஒரு நாள் நிகழ்ச்சி நடக்கிறது;
நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். இந்த நிகழ்ச்சி, 20, 30 மதிப்பெண்கள் எடுத்தவர்களையும், 98 மதிப்பெண்கள் வாங்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் நடத்தப்படுகிறது.

சாதாரண குடும்பத்தில் பிறந்த நம்மால், அது முடியுமா என்ற, தாழ்வு மனப்பான்மை யாருக்கும் வேண்டாம். எவ்வளவு பெரிய பல்கலைக்கழகத்தில் பேசினாலும், நான் ஒரு விவசாயியின் மகன் என்பதை பெருமையாகவே கூறுவேன். நீங்கள் எல்லாம் உழைப்பாளிகளின் பிள்ளைகள். பொதுவாகவே, உழைப்பாளிகளின் பிள்ளைகளுக்குத்தான், ஜெயிக்க வேண்டும் என்ற குணாதிசயம் அதிகம் இருக்கும்.

நம்மால் எதுவும் முடியும்; ஜெயித்துக் காட்டுவோம். இந்த நிகழ்ச்சி, நீங்கள் தேர்வுகளை பயமின்றி, தன்னம்பிக்கையுடன், எப்படி அணுக வேண்டும் என்ற ஆலோசனை நிகழ்ச்சி மட்டுமே. இதையே முழுமையாக வைத்து, யாரும் ஜாதகம் கணிக்கக்கூடாது. தேர்வு நடக்கும் நேரத்திற்கு முன்னதாகவே, சென்றுவிடுவது நல்லது; ஆனால், அடுத்தவர்களிடம் ஆலோசனை கேட்பது தவறு.

துண்டு காகிதங்களில், விடை எழுதி எடுத்துச் செல்வதும் தவறு. அப்படிப்பட்ட மனப்பான்மை, உங்களுக்கு ஒருபோதும் வேண்டாம். தேர்வில் தோல்வியுற்றால், அடுத்து வரும் உடனடி தேர்வில் எழுதி, வெற்றி பெற்று விடலாம். அதனால், பெரிய நஷ்டம் இல்லை. ஆனால், தற்கொலை போன்ற தவறான முடிவுகளை எப்போதும் எடுக்காதீர்கள்; மனித உயிர் விலைமதிப்பற்றது. இவ்வாறு, அவர் பேசினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.