Pages

Saturday, November 15, 2014

ஏழை மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுக்க புதிய கல்வி திட்டம் வேண்டும்

பா... நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–தமிழ்நாட்டில் மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் அதிகரித்து வருவதாக மத்திய அரசு அமைப்பு நடத்திய ஆய்வில்
தெரியவந்திருக்கிறது. 6 முதல் 13 வயது வரையுள்ள படிக்காத
சிறுவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பள்ளியில் சேர்ந்து பல்வேறு காரணங்களால் படிப்பை பாதியில் நிறுத்தி வெளியேறியவர்கள் என்று இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
தமிழகத்தில் படிக்காத சிறுவர்களில் 45.34 விழுக்காட்டினர் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் என கண்டறியப்பட்டது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த விகிதம் 8 விழுக்காடு அதிகரித்திருப்பது கல்வியிலும், வளர்ச்சியிலும் அக்கறை கொண்ட அனைவருக்கும் கவலையளிக்கும் தகவல்.
இதற்கான காரணங்கள் என்னவென்று கண்டுபிடித்து அதை சரி செய்ய வேண்டியது தமிழக அரசின் தலையாய கடமையாகும். 6 முதல் 13 வரையுள்ள குழந்தைகள் கல்வி கற்க ஏதுவாக அவர்கள் வாழும் பகுதிகளிலேயே பள்ளிக்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். இதற்காகத்தான் அருகாமை பள்ளிகள் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக பா... வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதை செயல்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது.
சென்னை போன்ற நகரங்களில் தெருவுக்குத்தெரு தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கும் போதிலும், கிராமப்பகுதிகளில் தொடக்கப்பள்ளிகளுக்கு செல்ல பல கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டிய அவல நிலை காணப்படுகிறது. இதை போக்குவதற்காகத்தான் கல்வி பெறும் உரிமைச்சட்டம் கொண்டு வரப்பட்டது.
மாணவர்களின் இடை நிற்றலை உடனடியாக தடுக்க வேண்டியது அவசர, அவசியமாகும். எனவே, பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், அருகாமைப் பள்ளித்திட்டத்தை செயல்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு, அனைத்து மாணவர்களும் தரமான கல்வி கற்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.


இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.