Pages

Friday, November 21, 2014

மாணவியை பிரம்பால் அடித்த விவகாரம்: ஆசிரியர்களிடம் தாசில்தார் விசாரணை

தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டி அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் வசந்தா. இவருடைய பேத்தி சிந்துஜா (வயது14). இவருடைய அம்மாவும், அப்பாவும் பிரிந்து வாழ்ந்து வருவதால் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார்.

சிந்துஜா தஞ்சை மானம்புச்சாவடி பகுதியில் உள்ள விடுதியில் தங்கி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தன்னை ஆசிரியை ஒருவர் பிரம்பால் அடித்துவிட்டதாக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மாணவி சிந்துஜா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த தகவலை அறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி நடராஜன், குழந்தைகள் உதவி மைய (சைல்டுலைன்) இயக்குனர் பாத்திமாராஜ் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அதிகாரிகளிடம் மாணவி சிந்துஜா கூறியதாவது:–
நான் சில மாணவிகளுடன் சேர்ந்து பள்ளியில் உள்ள கழிவறையை சுத்தம் செய்வது வழக்கம். கண்வலி ஏற்பட்டதால் ஒரு நாள் கழிவறையை சுத்தம் செய்யவில்லை. இதற்காக நேற்று முன்தினம் ஆசிரியை ஒருவர், என்னை அழைத்து எதற்காக கழிவறையை சுத்தம் செய்யவில்லை என்று கூறி பிரம்பால் அடித்தார். நான் அங்கிருந்து ஓடியபோது, சக மாணவர்கள் என்னை பிடித்து கொண்டு மீண்டும் ஆசிரியையிடம் ஒப்படைத்தனர். அப்போது அவர் என்னை நோக்கி பிரம்பை வீசினார். நான் கையால் தடுத்துவிட்டேன். இல்லையென்றால் கண்ணில் குத்தி இருக்கும். இதை நான் யாரிடமும் சொல்லாமல் காப்பகத்திற்கு சென்று விட்டேன். இரவு முழுவதும் எனக்கு முதுகு, தலை, கையில் வலி இருந்து கொண்டே இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து குழந்தைகள் உதவி மைய இயக்குனர் பாத்திமாராஜ் கூறும்போது, காப்பகத்தில் இருந்து யாரோ 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டு சென்னைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கிருந்து வந்த தகவலை தொடர்ந்து விடுதிக்கு தொடர்பு கொண்டு காப்பாளரிடம் பேசி உடனே சிந்துஜாவை மருத்துவமனையில் சேர்க்க கூறினேன். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி நடராஜன் கூறும்போது, நான் 3 முறை அந்த விடுதிக்கு ஆய்வுக்கு சென்று இருக்கிறேன். ஆனால் யாரும் கழிப்பறையை சுத்தம் செய்ய சொல்வதாக புகார் கூறவில்லை. இப்போது தான் புகார் வந்து இருக்கிறது. மாணவி சிந்துஜாவிடம் விசாரணை நடத்தப்பட்டு, அந்த அறிக்கையை மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மாணவி சிந்துஜாவுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று தாசில்தார் துரைராஜ் பாதிக்கப்பட்ட மாணவி, பள்ளியில் உள்ள மற்ற மாணவிகளிடம், ஆசிரியர்களிடம் மற்றும் பள்ளி ஊழியர்களிடம் விசாரணை நடத்துகிறார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.