மத்திய அரசின் கண்காணிப்பு மற்றும் நிர்வாகத்தின்கீழ் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ‘கேந்திர வித்யாலயா’ பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளியில் பயிற்று மொழியாக ஆங்கிலமும், தாய்மொழியாக இந்தியும், மூன்றாவது (விருப்ப) மொழியாக ஜெர்மனும் இருந்து வருகின்றன.
இதற்கிடையில், இந்தியாவின் தொன்மை வாய்ந்த மொழியான சமஸ்கிருதத்தை நீக்கிவிட்டு ஜெர்மன் மொழியை பாடத்திட்டத்தில் இணைத்த முந்தைய மத்திய அரசின் முடிவுக்கு எதிராகவும், இது கல்விக் கொள்கைக்கு எதிரானது என்றும் கேந்திர வித்யாலயா ஆசிரியர்களில் சிலர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
கேந்திர வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழியை பயிற்றுவிப்பது தொடர்பாக ‘கோயேத்தே பயிற்சியகம்’ மற்றும் ‘மேக்ஸ் முல்லர் பவன்’ ஆகியவற்றுக்கிடையே கடந்த 2011-ம் ஆண்டு செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமானது, எந்த நிலையிலும் மத்திய அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கப்படவில்லை என அரசு வட்டாரங்கள் கூறிவருகின்றன.
இதற்கிடையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிருதி இரானி தலைமையில் கடந்த மாதம் 27-ம் தேதி கேந்திர வித்யாலயா பள்ளிகளின் கவர்னர்கள் குழு கூட்டம் நடைபெற்றது.
6 முதல் 8 வரையிலான வகுப்புகளில் மூன்றாவது மொழியாக இருக்கும் ஜெர்மன் மொழியை நீக்கிவீட்டு, இனி சமஸ்கிருதத்தை மூன்றாம் மொழியாக சேர்ப்பது என இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த முடிவையடுத்து, இந்த (2014) கல்வியாண்டின் இடைக்காலத்திலேயே இப்பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சமஸ்கிருதத்தை கூடுதல் மூன்றாம் மொழியாக கற்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த புதிய முடிவினால் நாடெங்கிலும் உள்ள சுமார் 500 கேந்திர வித்யாலயா பள்ளிகளில் பயிலும் 6 முதல் 8 வகுப்புக்கிடையிலான சுமார் 70 ஆயிரம் மாணவ-மாணவிகள் சிரமத்துக்குள்ளாக நேரிடும் என அவர்களது பெற்றோர் கருதுகின்றனர்.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பதிலளித்த ஸ்மிருதி இரானி, ‘நாட்டின் நலன் கருதியே ஜெர்மனுக்கு பதிலாக சமஸ்கிருதத்தை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.
இந்த முடிவு தொடர்பாக ஊடகங்கள் குழப்பமான அறிக்கைகளை வெளியிடுவதால், கேந்திர வித்யாலயா பள்ளிகளில் பயில்பவர்களின் பெற்றோரிடையே பீதி ஏற்பட்டுள்ளதாகவும், சமஸ்கிருதத்தை சேர்க்கும் முடிவுக்கான காரணம் என்ன? என்பதை தெளிவாக விளக்கி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இன்று அறிக்கை வெளியிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.