Pages

Thursday, November 20, 2014

ஏ.டி.எம். மூலம் பணம் எடுக்க கட்டுப்பாடு: ரிசர்வ் வங்கி பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


மதுரையை சேர்ந்தவர் தமிழரசன், வக்கீல். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது: நாடு முழுவதும் தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளின் சார்பில் 1 லட்சத்து 60 ஆயிரம் ஏ.டி.எம். மையங்கள் வைக்கப்பட்டு உள்ளன. வாடிக்கையாளர்கள் வங்கிக்கு சென்று வரிசையில் நின்று பணம் எடுப்பதை தவிர்க்கவே ஏ.டி.எம். மூலம் பணம் எடுக்கும் வசதி கொண்டு வரப்பட்டது.

இதற்கிடையே, இந்திய வங்கிகள் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று ஏ.டி.எம். மூலம் பணம் எடுப்பதை வரைமுறைப்படுத்த ரிசர்வ் வங்கி 14.8.2014 மற்றும் 10.10.2014 ஆகிய தேதிகளில் சுற்றறிக்கை வெளியிட்டது.
அதில், 1.11.2014 முதல் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு வைத்துள்ள ஏ.டி.எம். தவிர பிற வங்கி ஏ.டி.எம். மூலம் கட்டணமின்றி பணம் எடுப்பதற்கான எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது மும்பை, டெல்லி, சென்னை, ஐதரபாத், கொல்கத்தா, பெங்களூர் ஆகிய பெருநகரங்களில் உள்ள பிற வங்கி ஏ.டி.எம் மூலம் கட்டணமின்றி பணம் எடுக்கும் எண்ணிக்கையை 5ல் இருந்து 3 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பெருநகரங்களை தவிர்த்து மற்ற இடங்களில் உள்ள ஏ.டி.எம். மூலம் கட்டணமின்றி 5 முறை பணம் எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
பெருநகரங்களில் ஏராளமான ஏ.டி.எம். மையங்கள் இருப்பதால் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏ.டி.எம். மூலம் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்றும், பிற வங்கிகளில் கட்டணமின்றி பணம் எடுப்பதற்கான எண்ணிக்கையை குறைத்து இருப்பதால் பெருநகரத்தை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு சிரமம் எதுவும் இருக்காது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வங்கி நிர்வாகம் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த வேண்டுமே தவிர குறைக்கக்கூடாது. பொதுமக்கள் நலனை ரிசர்வ் வங்கி கவனத்தில் கொள்ளவில்லை. எனவே, பிற வங்கி ஏ.டி.எம். மூலம் கட்டணமின்றி பணம் எடுக்க கட்டுப்பாடு விதித்து ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ள சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் வி.தனபாலன், வி.எம்.வேலுமணி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு சம்பந்தமாக ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளர் மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.