கல்வி, சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
நாட்டின் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கல்வி, சுகாதாரம், ஊரக வளர்ச்சி ஆகிய துறைகளுக்கு நிகழ் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதியைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மனித வள மேம்பாட்டுக்குத் தடை போடும் இந்த நடவடிக்கை வருத்தமளிக்கிறது.
நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை 10-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பொது நிதிநிலை அறிக்கையில் ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.80,043 கோடியும், கல்வித் துறைக்கு ரூ.77,307 கோடியும்,
சுகாதாரத் துறைக்கு ரூ.30,645 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி ஒதுக்கீடுகள் மிகவும் குறைவானவை என்று அப்போதே குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த நிலையில், ஊரக வளர்ச்சித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் சுமார் ரூ.20,000 கோடியும், கல்வித் துறைக்கு ரூ.11,000 கோடியும், சுகாதாரத் துறைக்கு சுமார் ரூ.7,000 கோடியும் குறைக்கப்பட இருப்பதாக நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதை நடைமுறைப்படுத்தினால் சமூகத் துறைகள் கடுமையாகப் பாதிக்கப்படும்.
எனவே, கல்வி, சுகாதாரம், ஊரக வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கும் முடிவைக் கைவிட்டு, அனைத்துத் துறைகளும் சம அளவில் வளர்வதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.