Pages

Tuesday, November 25, 2014

இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை, இடிக்க வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம்


இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை, இடிக்க வலியுறுத்தி, குழந்தைகளின் பெற்றோர், நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்னர்.


ஈரோடு, பெரியார் வீதி, அரசு துவக்க பள்ளி, பல ஆண்டாக செயல்படுகிறது. ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில், 250 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஓட்டு கட்டிடத்தில் வகுப்பறை நடக்கிறது.

இதுபற்றி பெற்றோர்கள் கூறியதாவது: மங்களூர் ஓடுகளால், 1911ல் பள்ளி கட்டப்பட்டது. 100 ஆண்டுக்கு மேல் பழமையானது. பொதுப்பணித் துறையால் பராமரிக்கப்படுகிறது. கால மூப்பின் காரணமாக, எந்த நேரத்திலும் கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இருமுறை கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.

விடுமுறை என்பதால் சேதம் ஏற்படவில்லை. பழுதடைந்த கட்டிடத்தில்தான், ஆங்கில வழி வகுப்புகள், 1-ஏ, 1-பி, 2-ஏ, 2-பி, தமிழ் வழி வகுப்புகள் 1, 2ம் நடக்கிறது. சற்றே நன்றாக உள்ள வகுப்பறையில்தான், அனைத்து மாணவ, மாணவியரும் அமர வைக்கப்பட்டு, பாடம் நடத்தப்படுகிறது. கூலி தொழிலாளர்களின் குழந்தைகளே, இங்கு அதிகம் படிக்கின்றனர்.

ஒரே வகுப்பில் அனைவரும் அமர வைக்கப்படுவதால், கல்வி தரம் பாதிக்கப்படுகிறது. ஒரே வகுப்பில், 50 மாணவர்கள் அமர வைக்கப்படுகின்றனர். இக்கட்டிடத்தின் முன்புறம், மூன்று ஆண்டுகளாக எஸ்.எஸ்.ஏ., மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ., அலுவலகங்கள் செயல்படுகிறது. இவை கான்கிரீட் கட்டிடத்தால் ஆனது. பழுதடைந்துள்ள ஓட்டு கட்டிடத்தை உடன் இடிக்க வேண்டும். வகுப்பறைகள் செயல்பட ஏதுவாக, இவ்விரு அலுவலகங்களையும், அங்கிருந்து மாற்ற வேண்டும்.

கன மழை, பலத்த காற்று வீசும் பட்சத்தில், ஓட்டு கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் விழக்கூடும். பாதுகாப்பற்ற கட்டிடத்தில் படிக்க, வேறு வழியின்றி குழந்தைகளை அனுப்புகிறோம். ஏற்கனவே இக்கட்டிடத்தை ஆய்வுசெய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், பயன்பாட்டுக்கு தகுதியற்றது என்று தெரிவித்துள்ளனர். பலமுறை, இதுகுறித்து கல்வி துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாளை முதல் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம், என்றனர்.

கலெக்டர் அலுவலகத்துக்கு, 40 பெண்கள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் வந்து, அமர்ந்து முற்றுகையிட்டனர். பூட்டி வைக்கப்பட்டுள்ள காலியான கட்டிடத்தில், மாணவர்களை அமர செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

முற்றுகையை அறிந்து, உடனடியாக பெற்றோர்கள் அழைக்கப்பட்டனர். சில மணி நேரத்தில் பிரச்னை தீர்க்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பெற்றோர்கள் அங்கிருந்து உடனடியாக கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.