Pages

Monday, November 17, 2014

தொழிற்கல்வி ஆசிரியர்களின் கூடுதல் சம்பளத்தை பிடித்தம் செய்ய கூடாது

திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களை சேர்ந்த 7 தொழிற்கல்வி ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 1990 முதல் 1994 வரை நாங்கள் 7 பேரும் அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டோம். தொழிற்கல்வி ஆசிரியர் என்பதால் பதவி உயர்வு இல்லை. அதனால், எங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்குரிய சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், 6வது சம்பள கமிஷன் பரிந்துரையில் எங்களுக்கு சிறப்பு நிலை சம்பளம் தரப்பட்டது. இந்நிலையில், சிறப்பு நிலை சம்பளத்தை தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு வழங்கியது தவறு என்று தணிக்கைத் துறை அறிக்கை அளித்தது. இதையடுத்து, நாங்கள் வாங்கிய கூடுதல் சம்பள தொகையை பிடித்தம் செய்ய தமிழக நிதித்துறை செயலாளர் கடந்த ஆகஸ்ட் 22ல் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் கடிதம் எழுதினார். இதன் அடிப்படையில், எங்களுக்கு வழங்கப்பட்ட கூடுதல் சம்பளத்தொகையை வசூலிக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. எனவே, எங்களின் சம்பளத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘கூடுதலாக வழங்கப்பட்ட சம்பளத்தை திரும்பப் பெறப் போவதாக தலைமை ஆசிரியர்கள், மனுதாரர்களுக்கு எழுத்துப்பூர்வமாக வழங்காதபட்சத்தில், எப்படி அந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியும்?’ என்று கேட்டார். அதற்கு மனுதாரர்களின் வக்கீல் ஆர்.முருகபாரதி, வாய்மொழியாகத்தான் தலைமை ஆசிரியர்கள், மனுதாரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். எழுத்துப்பூர்வமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அதை எதிர்த்து வழக்கு தொடரும் நிலை ஏற்படும். எனவேதான் இப்போதே இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, ‘தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட கூடுதல் சம்பளத்தை பிடிக்க இடைக்கால தடை விதித்ததுடன் இந்த வழக்கில் 8 வாரங்களுக்குள் நிதித்துறை செயலாளர், பள்ளி கல்வித்துறை செயலாளர், பள்ளி கல்வி இயக்குனர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.