Pages

Thursday, November 27, 2014

இடியட் பாக்ஸ் என பழிக்கப்படும் தொலைக்காட்சி!

நமது வாழ்க்கை முறையில், தொலைக்காட்சி என்பது தவிர்க்கவே முடியாத அம்சமாகி போனாலும், மாணவர்களின் படிப்பு என்று வரும்போது, அதிக பழிப்புக்கு ஆளாவது அந்த தொலைக்காட்சிதான்.


மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்கி, அதன்மூலம் திறமையை அளவிடும் நமது கல்விமுறைக்கு, தொலைக்காட்சி என்பது ஒரு எதிரியாக சித்தரிக்கப்படுகிறது. மேலும், அதற்கு, இடியட் பாக்ஸ் என்ற அவப்பெயரும் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்த தொலைக்காட்சியால் மாணவர்களுக்கு நிறைய நன்மைகள் உள்ளன என்பதை, அநேக நேரங்களில் நாம் மறந்து விடுகின்றோம். ஏனெனில், நம்மில் பெரும்பாலோர் அதைப் பயன்படுத்துவதே படம் பார்ப்பது மற்றும் சீரியல் பார்ப்பது ஆகியவற்றுக்குத்தான் என்பதால், நமக்கு அதன் நன்மைகளைப் பற்றி நினைத்துப் பார்ப்பதற்கு நேரம் இருப்பதில்லை.

முந்தைய நாட்களில், தொலைக்காட்சி மூலமாக நாம் பெறும் விஷயங்கள் குறைவானவையாகவே இருந்தன. ஆனால் இன்று, ஏராளமான சேனல்கள் வந்துவிட்டதோடு, சேட்டிலைட் தொலைக்காட்சி வசதியும் நமக்கு கிடைக்கிறது.

எனவே, நாம் எந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகிறோம் மற்றும் நமது சிந்தனை எந்தளவிற்கு விரிவடைந்துள்ளது என்பதை வைத்தே, தொலைக்காட்சிப் பெட்டிகள், அதாவது இடியட் பாக்ஸ்கள்(சிலரின் மொழியில்) நமக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை சொல்ல முடியும்.

பெற்றோர்கள், தொலைக்காட்சியை எந்த நோக்கத்திற்காக பயன்படுத்துகிறார்களோ, அதிலிருந்து என்னவித அனுபவத்தைப் பெறுகிறார்களோ, அதை வைத்துதான் குழந்தைகளும், பொதுவாக, கற்றுக் கொள்கின்றன.

அது இல்லையென்றால் உலகமே இல்லை என்று சொல்லப்படும் அளவிற்கு, நம் வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்றுள்ள இணையம்கூட, பல கெடுதல்களை செய்யப் பயன்படுவதுதான். ஆனால், இணையம் இல்லாமல், நம்மால் ஒருநாள் இருக்க முடியுமா?
எனவே, தொலைக்காட்சியை எப்படி பயனுள்ளதாகப் பயன்படுத்தலாம் என்பதை குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும்.

சாதாரண செய்திச் சேனல்களிலிருந்து உலகளாவிய செய்தி சேனல்களாகட்டும், காடுகள், விலங்கினங்கள் தொடர்பான சேனல்களாகட்டும், விவாதங்கள் ஆகட்டும், கருத்தரங்குகள் ஆகட்டும், நல்ல இசை நிகழ்ச்சிகள் ஆகட்டும், அற்புதமான சில திரைப்படங்கள் ஆகட்டும், ஆய்வுகள் ஆகட்டும், என பலவிதமான பயன்தரும் அம்சங்கள் தொலைக்காட்சிகளில் உள்ளன.

ஆனால், எத்தனைப் பெற்றோர்கள், மேற்கண்ட விஷயங்களில் ஆர்வம் செலுத்துகிறார்கள் என்று பார்த்தால், உண்மை நிலவரம் வருத்தம் தருவதாகத்தான் இருக்கும். அவர்களுக்குத் தேவையானதெல்லாம், மாசாலா மற்றும் பொழுதுபோக்கு திரைப்படங்களும், சீரழிவுகள் நிறைந்த சீரியல்களும்தான். சிலர், பாட்டு மற்றும் நகைச்சுவை சேனல்களில் ஆர்வம் காட்டுகின்றனர்; அவ்வளவே.

எனவே, இவர்களோடு அமரும் குழந்தைகளும், அறிவு வளர்ச்சிக்குப் பயன்படாத மற்றும் ஒரு குறுகிய வட்டத்தினாலான நிகழ்ச்சிகளையேப் பார்த்து பார்த்து, தொலைக்காட்சி என்றாலே அவைகள்தான் என்பதுபோல், தங்களின் எண்ணங்களை வளர்த்துக் கொள்கின்றனர்.

பலருக்கு படிப்பின்மீது இயல்பாகவே நாட்டம் குறைந்து, அதனால் பிரச்சினையாகி, இறுதியில், கெட்டப் பெயரும், இடியட் பாக்ஸ் என்ற பட்டப் பெயரும் தொலைக்காட்சிக்குத்தான்.

எனவே, பெற்றோர்கள், தேர்வு நேரங்களில் மட்டும் கேபிள் இணைப்பைத் துண்டித்துவிட்டு, பிற நேரங்களில் அதில் மூழ்கும் பழக்கத்தை கைவிட வேண்டும்.

தொலைக்காட்சியின் மூலம், குழந்தைகள் கற்றுக்கொள்ள எவ்வளவோ அம்சங்கள் உள்ளன. அவர்களுக்கு மட்டுமல்ல, பெற்றோர்களுக்கும்தான். ஏனெனில், கற்பதற்கு, வயதோ, வாழ்க்கை நிலையோ ஒரு பொருட்டே அல்ல.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.