அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் காவலாளிகளுக்கு ஈட்டிய விடுப்பை 30 நாள்களாக அதிகரித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இரவுக் காவலாளிகளுக்கான பணியிடம் கோடை விடுமுறை உள்ள பணியிடமாகக் கருதப்பட்டு அவர்களுக்கு ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது போன்று ஓராண்டிற்கு 17 நாள்கள் ஈட்டிய விடுப்பு அனுமதிக்கப்பட்டு வருகிறது.
அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், இளநிலை உதவியாளர்கள் கோடை விடுமுறையின் போதும் நிர்வாக நலன் கருதி பள்ளிக்கு வருகை புரிய வேண்டும். இவர்கள் விடுமுறையற்ற பணியாளர்களாகக் கருதப்படுகின்றனர். ஆனால், பள்ளி, அங்கிருக்கும் தளவாடப் பொருள்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை நாள்களிலும் காவலாளிகள் முழுநேரப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
எனவே, காவலர்களை விடுமுறையற்ற பணியாளர்களாக அறிவித்து, விடுமுறைக் காலத்தினை ஈட்டிய விடுப்பாகக் கணக்கிட்டு, இப்போது ஓராண்டுக்கு வழங்கப்படும் 17 நாள்கள் ஈட்டிய விடுப்பினை 30 நாள்களாக உயர்த்தி வழங்கலாம் எனவும், அதனடிப்படையில், விதிகளில் உரிய திருத்தம் வெளியிட வேண்டும் எனவும் பள்ளிக் கல்வி இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார். அவரது கருத்துருவை கவனத்துடன் பரிசீலித்த பிறகு, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் காவலாளிகளை கோடை விடுமுறையற்ற பணியாளர்களாகக் கருதி, விடுமுறைக் காலத்தினை ஈட்டிய விடுப்பிற்குக் கணக்கிட்டு, இப்போது ஓராண்டுக்கு வழங்கப்படும் 17 நாள்கள் ஈட்டிய விடுப்பை 30 நாள்களாக உயர்த்தி அனுமதிக்கலாம் என ஆணையிடப்படுகிறது என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பு அதிகரிக்க அரசு முன்வருமா????
ReplyDeleteM. GOPAL, Teacher, DINDIGUL
9486229370