நான் கடுமையாக உழைத்துதான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். அந்த காலத்தில் இரவு 2:00 மணி வரை படிப்பேன். கல்லுாரிக்கு ஒழுங்காக போவேன் என்று தனது வாழ்க்கை அனுபவங்களின் வாயிலாக மாணவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினார் தினமலர் ஆசிரியர் டாக்டர்.இரா.கிருஷ்ணமூர்த்தி.
தினமலர் டி.வி.ஆர்., அகாடமி சார்பில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கான ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, நேற்று காலை 9:00 மணி, மதியம், 1:00 என இரண்டு பகுதிகளாக, சென்னை பல்கலைக்கழக நுாற்றாண்டு விழா அரங்கில் நடந்தது. காலை நிகழ்ச்சியில், அறிவியல் பிரிவு மாணவர்களுக்கும், மதியம் நிகழ்ச்சியில், கலைத்துறை மாணவர்களுக்கும் வகுப்புகள் நடந்தன.
அதில், தினமலர் நாளிதழ் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: இந்த நிகழ்ச்சியை, மாணவர்கள், அமைதியுடனும், ஒழுக்கத்துடனும் இருந்து கவனிப்பது, எனக்கு மன நிறைவைத் தருகிறது. மாணவ, மாணவியரே... வாழ்க்கையில் முன்னேற, கடுமையாக உழைக்க வேண்டும். நான் கடுமையாக உழைத்துதான், இந்த நிலைக்கு வந்துள்ளேன். நான் அந்த காலத்தில், இரவு, 2:00 மணி வரை படிப்பேன். கல்லுாரிக்கு ஒழுங்காக போவேன்.
நான் ஆங்கில மீடியத்தில் படித்தேன். இன்டர்மீடியட் வகுப்பில், ஆசிரியர் ஒரு நாள், என்னை எழுந்திருக்கச் சொன்னார். நான், ஒன்றும் தவறு செய்யவில்லையே என நினைத்துக் கொண்டு எழுந்தேன். கிருஷ்ணமூர்த்தி... நீ, ஷேக்ஸ்பியர் பாடத்தில், முதல் மதிப்பெண் பெற்றிருக்கிறாய் என்று சொன்னார். எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
மாணவ, மாணவியரே... நீங்கள் எல்லாம் ஆங்கிலத்தை கட்டாயம் படிக்க வேண்டும். தமிழ், நம் தாய்மொழி; அதை மறக்கக்கூடாது. அதேநேரத்தில், ஆங்கிலமும் அவசியம். நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஆங்கிலம்தான் உலக மொழி என்றாகிவிட்டது.
வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்றால், ஆங்கிலப் புலமை உதவியாக இருக்கும். அதற்கு, ஆங்கிலத்தில் நன்றாக பேச வேண்டும். தொலைக்காட்சியில், பி.பி.சி., செய்திகளைப் பாருங்கள். அப்படி பார்க்கும்போது, உங்களுக்கு ஆங்கில உச்சரிப்பு சிறப்பாக இருக்கும். ஆங்கில நாளிதழ்களைப் படிக்க வேண்டும்.
ஆங்கில அகராதி பாருங்கள். தெரியாத வார்த்தைகளுக்கு பொருள் புரியும். நீங்கள் வெற்றிபெற, நல்வாழ்த்துக்கள். இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்ச்சிக்குப் பின்: எனக்கு, திக்குவாய் குறைபாடு உள்ளது. அதை, பெரும் குறையாக நினைத்துக் கொண்டிருப்பேன். ஆனால், இன்று மாவட்ட அளவில், இரண்டாம் இடம் பிடித்த சவுஜன்யாவுக்கு, அம்மா இல்லை; அப்பாவுக்கு பார்வை இல்லை; தினமும் வீட்டு வேலை செய்துவிட்டுதான் பள்ளிக்கு செல்வதாக கூறினார். அவர், எனக்கு வழிகாட்டியாக தெரிகிறார்.
- ராகேஷ், கல்யாணபுரம்
நான், பள்ளியில் நல்ல மதிப்பெண் பெறுபவள்தான். ஆனால் இதுவரை, தேவையில்லாதவற்றை எல்லாம் படித்து, நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்தேன். இப்போதுதான், கணிதத்தில், மூன்று மதிப்பெண் கேள்விகள் வராத பாடங்களைப் பற்றி தெரிந்து கொண்டேன். இப்படி, ஒவ்வொரு பாடத்திலும், நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன்.
- கீர்த்தி பிரியா, தண்டையார்பேட்டை
நான் இதுவரை, குடும்பத்தைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ, பெற்றோரின் நிலை பற்றியோ யோசித்ததில்லை. இங்கு, மனநல ஆலோசகர் கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி பேசிய பின், என் குடும்பத்தைக் காப்பாற்ற, படிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். நன்றாக படித்து, நல்ல மதிப்பெண் பெறுவேன்.
- அரவிந்தராஜ், கல்யாணபுரம்
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.