Pages

Thursday, November 20, 2014

மானியம் விலை சிலிண்டர் பெற வங்கிக்கணக்கு கட்டாயம்: ஜன. 1 முதல் அமல்!


மானியவிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் பெற வங்கிக் கணக்கு கட்டாயம் என்பதை வரும் ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்படவுள்ளது.

சிலிண்டர் பதுக்கல், கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பது, உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்கும் பொருட்டு வீட்டு உபயோகத்துக்கான சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கான மானியத்தை பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2013 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டத்தின்படி சிலிண்டர் வாங்குபவர்கள் மானியம் இல்லாமல் முழு விலை கொடுத்து (ரூ.950) பெற வேண்டும். அதன்பின்னர் சிலிண்டருக்கான மானியத்தொகையான ரூ. 560 அவர்களது வங்கி கணக்கில் போடப்படும்.
இதற்கு ஆதார் அட்டை கட்டாயம் என்று முந்தைய அரசு அறிவித்தது. இந்நிலையில் மத்தியில் பா.ஜனதா அரசு பதவியேற்ற பின் ஆதார் அட்டை கட்டாயம் கிடையாது என்று அறிவித்தது. அதேநேரம் ஆதார் அடையாள அட்டை அல்லது வங்கி கணக்கு இருந்தால் தான் மானியம் கிடைக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் 540 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்தில் ஜனவரி1 ஆம் தேதி முதல் நேரடி மானிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதன்படி வங்கி கணக்கை தொடங்கி அதனை சமையல் கியாஸ் விநியோகஸ்தர்களிடம் பதிவு செய்ய வேண்டும். ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 3 மாதங்கள் கருணை காலமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாக வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு எண்களை அல்லது ஆதார் எண்களை விநி யோகஸ்தரிடம் கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அந்த 3 மாத காலத்தில் கியாஸ் வாங்குபவர்கள் மானியம் கழித்து வழக்கமான முறையில் ரூ.400 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். அதன்பிறகு மேலும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்படும். அப்போது சமையல் கியாஸ் மானியம் தொகை கழிக்காமல் முழு தொகையான ரூ.950 செலுத்திதான் பெற முடியும். ஆனால் அதற்கான மானியம் பின்னர் வழங்கப்படும். ஜூன் மாதத்திற்கு பிறகு பதிவு செய்பவர்களுக்கு அரசின் மானியம் கிடைக்காது. முழு தொகை கொடுத்துதான் வாங்க வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.