Pages

Friday, November 14, 2014

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பள்ளிக் கல்விக்கு ரூ.19 ஆயிரத்து 800 கோடி நிதி ஒதுக்கீடு: கே.சி.வீரமணி

பள்ளி கல்வி துறை மூலம் கரூர் மண்டலத்திற்கு உட்பட்ட கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, ஈரோடு, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. கரூரை அடுத்த புலியூரில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்திற்கு பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா தலைமை தாங்கினார். கரூர் மாவட்ட கலெக்டர் ஜெயந்தி முன்னிலை வகித்தார். போக்குவரத்து துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி சிறப்புரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு ஆய்வு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
ஜெயலலிதா வழங்கிய திட்டங்களை மாணவர்களுக்கு எடுத்து சென்று, தேர்ச்சி விகிதத்தை கூட்ட ஆசிரியர்கள் தானாகவே முன் வந்து முழு ஈடுபாட்டுடன் இருப்பது பாராட்டுக்குரியது. தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளும் தன்னிறைவு அடைய வேண்டும் என்று ஜெயலலிதா விஷன் 2023 என்ற திட்டத்தை தொடங்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். பள்ளி கல்வி துறை இந்த இலக்கை முன் கூட்டியே எட்டி விடுவோம். லட்சியத்தை அடைவோம்.
இதே போன்று ஆசிரியர்கள் போட்டி, போட்டுக்கொண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த ஈடுபட்டு வருவது பாராட்டத்தக்கதாகும்.
இந்த ஆண்டு பள்ளி கல்விக்கு ரூ.19 ஆயிரத்து 800 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. கல்வி துறைக்கு அரசியல் வரலாற்றில் இவ்வளவு நிதி ஒதுக்கியது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. கல்வி, சுகாதாரத்தில் உயர்ந்த நாடு, வளர்ச்சி அடைந்த நாடு என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.
கடந்த காலத்தில் 21 ஆயிரத்து 807 ஆசிரியர் பணியிடங்கள் பற்றாக்குறையாக இருந்தது. தற்போது புதிதாக 64 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நிரப்பப்பட்டு உள்ளது. இதையும் மீறி சில இடங்களில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டால், பெற்றோர்–ஆசிரியர் கழகம் மூலம் நிரப்ப உத்தரவிடப்பட்டது. அதன்படி இந்த ஆண்டு பெற்றோர்–ஆசிரியர் கழகத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. வரலாற்றில் இதுவரை கேள்விப்படாத அளவில் கடந்த ஆண்டு 10, 12–ம் வகுப்பு பொது தேர்வில் அரசு பள்ளிகளில் 91 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளது.
ஆசிரியர்கள் நடுக்கத்தோடு பேச கூடாது. ஆசிரியர்கள் சுறுசுறுப்பாக இருந்தால் தான் மாணவர்களை சிறப்பாக வழி நடத்த முடியும்.
எனவே ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றி வரும் ஆண்டில், 10 மற்றும் 12–ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறியதாவது:–
பள்ளி கல்வி துறைக்கு அரசியல் வரலாற்றில் அதிக அளவு நிதி வழங்கி சாதனை படைத்தவர் ஜெயலலிதா. எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் மாணவ–மாணவிகளுக்கு 14 வகையான திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதா தொடங்கி வைத்த திட்டங்கள் மூலம் கல்வியில் ஒரு பெரிய புரட்சி ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு கூறினார்.
கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா கூறியதாவது:–
ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தகுந்த முறையில் தரமான கல்வியை புகுத்தினால், நிர்ணயிக்கப்பட்ட தேர்ச்சி விகிதத்தை உயர்த்தி காட்ட முடியும். எனவே பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்னும் 4 மாதம் அயராது உழைக்க வேண்டும். வெற்றி உங்கள் கையில் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு குறிப்பேடு வழங்கப்படும். குறிப்பேட்டை சரியாக படித்தால், 100 சதவீதம் தேர்ச்சி பெற வாய்ப்பு உள்ளது. இது பள்ளி தலைமை ஆசிரியர்கள் கையில் தான் உள்ளது.
இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.