Pages

Saturday, October 11, 2014

எம்.பில்., ஊக்கத்தொகை பெறுவதில் சிக்கல் : குழப்பத்தில் பட்டதாரி ஆசிரியர்கள்

தமிழகத்தில் எம்.பில்., முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் அதற்கான ஊக்க தொகை பெறுவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு ஊக்க தொகை வழங்குவதற்கான அதிகாரம் தலைமையாசிரியருக்கு உள்ளதா அல்லது இணை இயக்குனருக்கு உள்ளதா என்ற குழப்பம் நீடிப்பதாக புகார் எழுந்துள்ளது. முதுகலை ஆசிரியர்கள் எம்.எட்., பிஎச்.டி., முடித்தால் அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும். இதேபோல் பட்டதாரி ஆசிரியர்கள் ஏதேனும் ஓர் முதுகலை பட்டம், எம்.எட்., பிஎச்.டி., ஆகியன முடித்திருந்தால் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
ஒருவருக்கு அவர்களின் பணிக்காலத்தில் இரண்டு முறை மட்டுமே இத்தொகை வழங்கப்படும். இதனால் ரூ.2000 முதல் ரூ.3000 வரை ஆசிரியர் சம்பளம் உயரும்.
சில ஆண்டுகளுக்கு முன் எம்.பில்., முடித்த முதுகலை ஆசிரியர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டது. இதுகுறித்து பட்டதாரி ஆசிரியர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்ததால் 18.1.2012 முதல் அவர்களுக்கும் எம்.பில்., ஊக்கத் தொகை வழங்க கல்வித் துறை உத்தரவிட்டது. 18.1.2012க்கு முன் தலைமையாசிரியர்களிடம் முன்அனுமதி பெறாமல் பல ஆசிரியர்கள் இப்படிப்பை முடித்தனர். கல்வித் துறை வெளியிட்ட உத்தரவிற்கு பின் அவர்களும் எம்.பில்., ஊக்கத் தொகை பெற தகுதி பெற்றவர்களா என்பது உட்பட பல்வேறு சந்தேகங்கள் அரசு உத்தரவில் தெளிவுபடுத்தப்படவில்லை. மேலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு எம்.பில்., ஊக்கத் தொகை வழங்க தலைமையாசிரியர் அனுமதி வழங்க வேண்டுமா அல்லது இணை இயக்குனர் வழங்க வேண்டுமா என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது. இதனால், பலருக்கும் இந்த ஊக்கத் தொகை கிடைக்காமல் நிலுவையில் உள்ளன.

பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் முருகன், பொருளாளர் சூசை அந்தோணிராஜ் கூறியதாவது: முதுகலை ஆசிரியர்களுக்கு எம்.பில்., ஊக்கத் தொகை பெற சிறப்பு அரசாணை வெளியிடப்பட்டது. அப்போது, முன்அனுமதி பெறாமல் படித்த ஆசிரியர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், பட்டதாரி ஆசிரியர்களுக்கு எவ்வித வழிகாட்டுதல்களும் இல்லை. மேலும், ஊக்கத் தொகை வழங்குவதற்கான அனுமதி அளிப்பது தலைமையாசிரியரா அல்லது இணை இயக்குனரா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். அரசு உதவிபெறும் பள்ளிகளில் தாளாளர்களிடம் அனுமதி பெற்று பலர் இப்படிப்பு முடித்துள்ளனர். அவர்கள் நிலை குறித்தும் தெளிவுபடுத்த வேண்டும், என்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.