Pages

Friday, October 17, 2014

இந்தாண்டிலும் பள்ளி துவங்கவில்லை; படிப்பை இழந்து நிற்கும் குழந்தைகள்

துரைப்பாக்கம் எழில் நகரில் புதிதாக கட்டடப்பட்டுள்ள பள்ளி கட்டடம், முறையாக மாநகராட்சி வசம் ஒப்படைக்காததால், நடப்பாண்டிலும் பள்ளி செயல்பட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.


துரைப்பாக்கம் எழில் நகரில், 6,000 அடுக்கு மாடி குடியிருப்புகளில், ஆயிரம் குடும்பங்கள் வரை குடியமர்த்தப்பட்டனர். புதிதாக குடியேற்றப்படும் குடும்பங்களின் குழந்தைகளுக்காக, ஆரம்ப பள்ளி கட்ட, 19 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், குடிசை மாற்று வாரிய நிலம் ஒதுக்கப்பட்டது. அங்கு, 1.50 கோடி ரூபாய் செலவில், பள்ளி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், பள்ளி முறையாக இன்னும் மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்படவில்லை.

விளைவாக, நடப்பாண்டிலும் பள்ளி செயல்பட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இதனால், எழில் நகரில் குடி பெயர்ந்தவர்களுடைய குழந்தைகளின் படிப்பு இந்தாண்டும் பாதிக்கும் அபாய சூழ்நிலை நிலவுகிறது.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "கண்ணகி நகர் பள்ளிகள், காஞ்சிபுரம் மாவட்ட தொடக்க கல்வித்துறை வசம்தான் உள்ளன. எழில்நகர் பள்ளி எங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. அப்படியே ஒப்படைத்தாலும், அடுத்த ஆண்டு முதல்தான் பள்ளியை திறந்து வகுப்புகளை நடத்த முடியும்" என்றார்.

* பள்ளி கட்டட பணி முடிந்ததால், இந்தாண்டில் எங்கள் குழந்தைகளை இங்கு சேர்க்கலாம் என நினைத்தோம். ஆனால், அதிகாரிகள் இழுத்தடிப்பால், இந்தாண்டும் எங்கள் குழந்தைகளின் படிப்பு வீணாகிவிட்டது.

- உஷாராணி, எழில் நகர்.

* தற்போது மாநகராட்சியின் எல்லையின் கீழ், எழில் நகர் வருவதால், பள்ளி கட்டடத்தை அதன்வசம் விரைவில் ஒப்படைக்க உள்ளோம். அதற்கான பணிகளில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்

- குடிசை மாற்று வாரிய அதிகாரி

* எழில் நகர் பள்ளியை எங்கள் வசம் ஒப்படைத்து இருந்தால், நாங்கள் இந்த ஆண்டே வகுப்புகளை துவக்கியிருப்போம். குடிசை மாற்று வாரியம் முறையாக திட்டமிடவில்லை. எங்கள் மீது தவறில்லை.

- காஞ்சிபுரம் மாவட்ட தொடக்க கல்வித்துறை அதிகாரி.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.