அழகப்பா பல்கலை., விடைத்தாள் மறு மதிப்பீடு செய்வதில் முறைகேடு நடப்பதாக, மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். காரைக்குடி அழகப்பா பல்கலை., அமைந்துள்ள துறைகள், உறுப்பு கல்லூரிகள், இணைப்பு கல்லூரிகள், தொலை நிலை கல்வி இவற்றிற்கான தேர்வு, ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மற்றும் ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது.
இதன் முடிவு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் வெளியிடப்படுகின்றன. முடிவு வெளியான பின், தேர்வில் தேர்ச்சி அடையாத மற்றும் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்கள், தங்களது விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்ய பாடம் ஒன்றுக்கு ரூ.500 வீதம் செலுத்த வேண்டும். இந்த மறு மதிப்பீட்டு முடிவுகள், ஒரு மாதத்துக்குள் வெளியிடப்படுகின்றன.
இம்முடிவுகளில், ஏற்கனவே பெற்ற மதிப்பெண்ணுக்கும், மறுமதிப்பீட்டு மதிப்பெண்ணுக்கும் இடையே உள்ள வித்தியாசம், அதிக அளவில் இருப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டு, மாணவர், ஆசிரியர்கள் மட்டத்தில் எழுந்து வருகிறது. அண்மையில் மாணவர் ஒருவர் தேர்வில் தோல்வியுற்றதால், மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்ததில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தோல்வியுற்ற மாணவர், மறு மதிப்பீட்டில் வெற்றி பெறலாம். ஆனால், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றது எப்படி என, உடன் படித்த மாணவர்கள், ஆசிரியர்கள் கேள்வி விடுத்துள்ளனர்.
அப்படி எனில், ஏற்கனவே முறையான ஆசிரியர் மூலம், முறையான வழியில் திருத்தப்படவில்லையா? என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகின்றனர். ஏற்கனவே பல்கலை கழக வாயில் முன்பு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆசிரியர்கள், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், பல்கலைக்கழக வினாத்தாள் தயாரிப்பது, விடைத்தாள் திருத்துவதில், சில அதிகாரிகள் தனக்கு வேண்டிய ஆசிரியர்களை வைத்து திருத்துவதால், முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளதாகவும், அவர்கள் குற்றம் சாட்டினர்.
துணைவேந்தரின் தொடர் காலியிடத்தால், இதுபோன்று பல்கலைக்கழகத்தில் நடக்கும் குளறுபடி, குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பதிவாளர் மாணிக்கவாசகம் கூறும்போது: மாணவர்கள் புகார் எதுவும் வரவில்லை. விடைத்தாள் திருத்துவதில் ஒரு சில நேரங்களில், மதிப்பெண் மாறுபாடு ஏற்படத்தான் செய்யும். இரண்டாவது திருத்துதலில் தவறு இருப்பின், மூன்றாவது மறு மதிப்பீட்டுக்கு ஏற்பாடு செய்யப்படும், என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.