இந்த ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசை, பாகிஸ்தான் சிறுமி மலாலாவுடன் இணைந்து பெற்ற மத்திய பிரதேசத்தை சேர்ந்த, கைலாஷ் சத்யார்த்தி, 60, குழந்தைகள் நலனுக்காக இந்தியாவில் மட்டுமின்றி, 140 நாடுகளில் போராடி வருகிறார்.
பலருக்கும், சரிவர பெயரே தெரியாத ஆப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள், நகரங்கள் பலவற்றில், பெயர் தெரியாத, முகம் தெரியாத பிஞ்சுகளை காப்பாற்றுவதற்காக போராடுகிறார்.
பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக, இந்தியாவின் எல்லையோர மாநிலங்களைச் சேர்ந்த சிறுமியரை கடத்திச் செல்லும் கும்பலுக்கு எதிராக இவர் மேற்கொண்ட நடவடிக்கைகளால், அந்த சமூக விரோத கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டு, ரத்தம் காயம் அடைந்தவர். குழந்தை தொழிலாளர்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் பாடுபடும் இவரை, ரவுடி கும்பல்களும், சட்டவிரோத அமைப்புகளும் இப்போதும் வேட்டையாடி வருகின்றன. எனினும், அவற்றை பற்றி கவலைப்படாமல், இந்திய நகரங்கள் அனைத்திலும் உள்ள ஏழை குழந்தைகளின் காவலனாக விளங்குகிறார், கைலாஷ் சத்யார்த்தி.
மத்திய பிரதேசத்தின் விதிஷா நகரை சேர்ந்த சத்யார்த்திக்கு, மனைவி மற்றும் மகள், மகன் உள்ளனர். மகன், சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞராக உள்ளார். மகள், கல்லுாரியில் படித்து வருகிறார். சத்யார்த்தி இந்த தொண்டில் ஈடுபட, அவருக்கு ஆக்கமும், ஊக்கமும் அளிப்பது அவரின் மனைவிதான்.
எலக்ட்ரானிக் இன்ஜினியரான சத்யார்த்தி, பச்பன் பச்சாவோ அந்தோலன் என்ற அமைப்பை நிறுவி, குழந்தைகளுக்காக பாடுபட்டு வருகிறார். இந்த சேவையில் அவர் ஈடுபட காரணமாக இருந்தது ஒரு சம்பவம்.
மத்திய பிரதேச நகரம் ஒன்றில், செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவருடன், அவரின் 5 வயது சிறுவனும் செருப்பு தைத்து கொண்டிருந்தான். அந்த தொழிலாளியிடம் நீ தான் இந்த தொழிலை செய்கிறாய். ஏன் இந்தச் சிறுவனையும் இதில் ஈடுபடுத்துகிறாய்... என சத்யார்த்தி கேட்டபோது, இவன் உழைக்கவே பிறந்தவன்; அதனால்தான், இப்போதே செருப்பு தைக்கிறான் என அந்த தொழிலாளி வேதனையுடன் கூறி உள்ளார்.
அதற்கு பிறகுதான், எந்த குழந்தையும் தொழில்களில் ஈடுபடக் கூடாது என்பதை நோக்கமாக கொண்டு, இந்த அமைப்பை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறார் சத்யார்த்தி.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.