Pages

Friday, October 24, 2014

இடி–மின்னலின் போது திறந்த ஜன்னல் அருகே நிற்கக்கூடாது: மின்வாரியம் அறிவுரை

செகமம் மின் வாரிய அலுவலகம் சார்பில் தற்பொழுது பெய்து வரும் பருவ மழையினால் ஏற்படும் மின் விபத்துகளை தவிர்க்க பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து நோட்டீஸ் விநியோகம் நடந்தது. 10 இடங்களுக்கு மேல் விழிப்புணர்வு குறித்து தட்டிகளும் வைக்கப்பட்டன.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–
மழை காலங்களில் மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள், வயர்கள் (இழுவை கம்பிகள்) அருகே செல்லக்கூடாது.
வீட்டில் உள்ள மின் சாதனத்தில் மின் அதிர்ச்சியை உணர்ந்தால் உடனே வீட்டில் உள்ள மெயின் சுவிட்ச்களை உலர்ந்த ரப்பர் காலணிகளை அணிந்து கொண்டு அணைத்து விட்டு உடனடியாக மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் நிற்பதையும், நடப்பதையும் தவிர்த்து கொள்ள வேண்டும். மின் கம்பத்திற்காக போடப்பட்டுள்ள கம்பி மீதும் கம்பத்தின் மீது கயிறு கட்டி துணியை உலர வைக்க கூடாது.
குளியறையிலும் கழிப்பறைகளிலும் ஈரமான இடங்களில் சுவிட்சுகளை பொருத்தக் கூடாது.
இடி அல்லது மின்னலின் போது டி.வி., மிக்ஸி, கிரைண்டர், கணினி மற்றும் தொலைபேசி போன்றவற்றை செயல்படுத்தக் கூடாது.
அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொடாமலும் மிதிக்காமலும் இருக்க வேண்டும். இது குறித்து உடனடியாக மின் வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மின் மாற்றிகள் அருகில் குப்பைகளை கொட்டக்கூடாது. கால் நடைகளை மின் கம்பத்திலோ, இழுவை கம்பிகளிலோ கட்டி வைக்கக்கூடாது.
மின் பாதைக்கு அடியிலே அல்லது அருகிலோ கட்டிடங்கள் கட்டுவதை தவிர்க்க வேண்டும்.
கேபிள் டி.வி. ஒயர்களை மின் பாதைகளின் குறுக்கே எடுத்து செல்லக்கூடாது. நிலத்தடி மின் பாதைகள் செல்லும் இடத்தில் நிலத்தினை துளையிடுவதை அல்லது குழி தோண்டுவதை தவிர்க்க வேண்டும்.
இடி அல்லது மின்னலின் போது உடனடியாக கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டிடம், வீடு, உலோகத்தால் மேலே மூடப்பட்ட பஸ், கார், வேன் போன்றவைகளிலோ தஞ்சம் அடைய வேண்டும். இடி மின்னலின் போது குடிசை வீட்டிலோ மரத்தின் அடியிலோ, பஸ் நிறுத்த நிழற்குடையின் கீழோ தஞ்சம் அடையக்கூடாது.
இடி மின்னலின் போது திறந்த நிலையில் உள்ள ஜன்னல்கள், கதவு போன்றவற்றின் அருகில் இருக்கக்கூடாது. மின்சாரத்தில் தீ ஏற்பட்டால் சைரனை ஒலிக்க செய்ய வேண்டும். உடனே மின்சாரத்தை நிறுத்த வேண்டும்.
அருகில் தீப்பற்றக்கூடிய பேப்பர், பிளாஸ்டிக் சாமான்கள், எண்ணை போன்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இத்தகவலை நெகமம் மின்வாரிய அலுவலக செயற்பொறியாளர் வெங்கடசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.