Pages

Wednesday, October 29, 2014

ஆசிரியர் பயிற்சி கல்விக்கு அடுத்த ஆண்டு முதல் புதிய பாடத் திட்டம்!


ஆசிரியர் பயிற்சி கல்விக்கு, அடுத்த ஆண்டு முதல், புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. மாணவர்களின் தேர்வு மதிப்பீடு முறையில் மாற்றம், மாணவர்களின் செயல் வழியிலான அணுகுமுறை திட்டங்களுக்கு, அதிக முக்கியத்துவம் உள்ளிட்ட, பல புதிய திட்டங்களை அமல்படுத்த, மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.


600 பள்ளிகள்: தமிழகத்தில், 600 ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதில், இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பட்டயக் கல்வி அளிக்கப்படுகிறது. இந்த படிப்பை படிப்பவர்கள், ஆரம்ப பள்ளி ஆசிரியராக பணிபுரியும் தகுதியை பெறுகின்றனர்.

மாணவ சமுதாயத்தின் அடித்தளமாக உள்ள, ஆரம்ப கல்வியை வலுப்படுத்தவும், ஆரம்ப கல்வி கற்பிக்கும் ஆசிரியரை, தரமுள்ளவர்களாக, திறமையானவர்களாக உருவாக்கவும், தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசு உருவாக்கிய, ஆசிரியர் கல்விக் கொள்கை - 2009ன் படி, பல மாநிலங்கள், ஆசிரியர் பயிற்சிக்கான பாடத்திட்டங்களை மாற்றி உள்ளன.

கற்பித்தலில் புதிய யுக்தி: வலுவான பாடத்திட்டம், கற்பிக்கும் முறையில் புதிய யுக்திகள், மாணவர்களை, உளவியல் ரீதியாக அணுகி, சிறப்பான முறையில், கல்வி கற்பித்தல், கற்றல் - கற்பித்தலில், தகவல் தொழில்நுட்ப பயன்பாடு, கம்ப்யூட்டர் வழியிலான கற்பித்தல் என, பல புதிய திட்டங்கள், புதிய பாட திட்டங்களில் அமல்படுத்தப்படுகின்றன.

கேரளாவில், கடந்த ஆண்டு, புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆந்திரா, கர்நாடகாவில், புதிய பாடத் திட்டம் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில், மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம், வரைவு பாடத் திட்டத்தை தயாரித்துள்ளது. முதல் ஆண்டிற்கு ஏழு பாடம், இரண்டாவது ஆண்டிற்கு ஏழு பாடம் என, 14 பாடங்கள் இருக்கின்றன.

வரைவு பாடத்திட்டம் தயார்: ஒவ்வொரு பாடத்திற்கும், ஐவர் அடங்கிய குழுவை அமைத்து, நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு அனுப்பி, அங்குள்ள நிலவரங்களை நேரில் ஆய்வுசெய்ய, இயக்குனரகம் நடவடிக்கை எடுத்தது. குழுவினர், பிற மாநிலங்களின் பாடத் திட்டம், கற்பித்தல் முறை, புதிய திட்டங்கள் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு, இயக்குனரகத்திற்கு அறிக்கை அளித்தனர்.

அதனடிப்படையில், தேவையான மாற்றங்கள் செய்து, வரைவு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அனுமதி அளித்ததும், பாடத் திட்டம் எழுதும் பணி துவங்கும். அடுத்த ஆண்டு, புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவும், துறை திட்டமிட்டுள்ளது.

மதிப்பீடு முறை மாறுகிறது: இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவன முதல்வர் அய்யப்பன் கூறியதாவது: தற்போதைய பாடத் திட்டம், எழுத்து தேர்வின் அடிப்படையில், மாணவர்களை மதிப்பீடு செய்வதாக உள்ளது. புதிய பாடத்திட்டத்தில், தேர்வு அடிப்படையிலான மதிப்பீடு குறைவாகவும், உளவியல் ரீதியிலான மதிப்பீடு, கவனிக்கும் ஆற்றலின் அடிப்படையிலான மதிப்பீடு, பேச்சுத் திறன் அடிப்படையிலான மதிப்பீடு என, பல வகையான மதிப்பீட்டின் கீழ், மாணவர்களை மதிப்பீடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

மேலும், கற்றல், கற்பித்தலில் கம்ப்யூட்டர் பயன்பாடு, கற்பித்தலில், புதிய அணுகுமுறையை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட திட்டங்களும் இடம்பெறும். இவ்வாறு அய்யப்பன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.