Pages

Friday, October 31, 2014

பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன்: எஸ்எஸ்ஏ திட்ட இயக்குநர் அதிருப்தி!

பள்ளி மாணவர்களின் கணித, வாசிப்புத் திறனை சோதித்த அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் (எஸ்.எஸ்.ஏ.) இயக்குநர் பூஜாகுல்கர்னி அதிருப்தி அடைந்தார்.

அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மாநிலத் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி. வாக்காளர் பட்டியல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள இவர் காஞ்சிபுரத்துக்கு புதன்கிழமை வந்தார். வாக்காளர் பட்டியல் தொடர்பான பணியை முடித்து விட்டு, காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரிய காஞ்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒலிமுகமதுப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆகியவற்றில் செயல்படுத்தப்படும் அனைவருக்கும் கல்வி இயக்ககத் திட்டம் குறித்து ஆய்வு நடத்தினார்.
பள்ளிகளில் மாணவர்களின் எளிய கணித முறை, வாசிப்புத் திறனை அவர் சோதித்துப் பார்த்தார். அதில் ஓரிரு மாணவர்களைத் தவிர பெரும்பாலான மாணவர்கள் வாசிப்புத் திறன் மிகவும் மோசமாக இருந்தது. மேலும் கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல் போன்ற அடிப்படைக் கணித அறிவியலிலும் மாணவர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும், வகுப்பு ஆசிரியர்களிடம் பாடம் கற்பிக்கும் முறை குறித்து பூஜா குல்கர்னி கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: உத்தரமேரூர் ஒன்றியம் விசூர் உள்ளிட்ட பகுதிகளில் கழிப்பிடம் கட்டாமல் கணக்கு காட்டப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படும். மேலும் இதே போன்ற பிரச்னை மாவட்டத்தில் வேறு எங்கெங்கு உள்ளது என்பது குறித்தும் கண்காணிக்கப்படும்.
காஞ்சிபுரம் ஒன்றியம் சிறுனைப் பெருக்கல் கிராமத்தில் அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் கட்டப்பட்ட பள்ளி கூடுதல் வகுப்பறை குறுகிய காலத்தில் இடிந்தது குறித்தும் விசாரிக்கப்படும். பள்ளி மாணவர்களின் கற்றல், வாசித்தல், எளிய கணிதத் திறனை வளர்க்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.