கடந்த மாதம் நடைபெற்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. இந்த முடிவுகள் காட்டும் புள்ளிவிவரங்கள், தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை. முதல் தாள், இரண்டாம் தாள் இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்கள் 89 பேர் மட்டுமே!
எத்தனை பேர் விண்ணப்பித்தார்கள், எத்தனை பேர் எழுதினார்கள் என்கிற புள்ளிவிவரங்களுக்குள் சிக்கிக்கொள்ளத் தேவையில்லை. எந்தெந்த மாவட்டங்களிலிருக்கும், எந்தெந்த கல்வியியல் கல்லூரிகளில் இந்த 89 பேர் படித்தார்கள் என்பதெல்லாம்கூட இந்த இடத்திற்கு தேவையில்லாதது. இந்த நேரத்தில் நாம் சிந்திக்க
வேண்டிய விஷயம் - நாம் அகில இந்திய அளவிலான ஆசிரியர் தொழில் வாய்ப்புகளைத் தவறவிடுகிறோம் என்பதை மட்டுமே!
தமிழ்நாட்டில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், எந்த ஊரிலும் சிறந்த ஆசிரியராகப் பணியாற்ற முடியும் என்ற நிலைமை இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்தது. பிற மாநிலங்களுக்கு மட்டுமன்றி, பிலிப்பின்ஸ், ஆப்பிரிக்க நாடுகள் போன்றவற்றுக்குக்கூட, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று சொல்வதே ஒரு தகுதியாக அறியப்பட்ட காலம் ஒன்று இருந்தது. கணித ஆசிரியர்களாக,
அறிவியல் ஆசிரியர்களாக, ஆங்கில ஆசிரியர்களாக தமிழர்கள் பல திசைகளிலும் பறந்து சென்று பணியாற்றிய காலம் அது.
கேரளத்தவர் செவிலியர்களாக உலகம் முழுதும் வலம் வருவதைப்போல, தமிழர்கள் இந்தியாவின் பிற மாநிலங்களிலும், அண்டை நாடுகளிலும் ஆசிரியர்களாக வலம் வந்தனர். இப்போதும் அந்த வாசல்கள் திறந்தே இருக்கின்றன. ஆனால், செல்வதற்குத்தான் ஆசிரியர்கள் இல்லை. இந்தியா முழுவதிலும் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் ஆசிரியராகச் சேரும் வாய்ப்பை தமிழர்கள் ஏன் இழக்க வேண்டும்?
தமிழ்நாட்டின் தனியார் கல்வியியல் கல்லூரிகள் பலவும், பி.எட் பட்டம் இருந்தாலே போதும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு, அரசியல் செல்வாக்கினால் அரசுப் பள்ளி
களில் சேர்ந்துவிடலாம் என்று எண்ணிய காலகட்டத்தில் தோன்றியவை. இவற்றில் பலவும் பட்டம் வழங்கும் நிறுவனங்களாக மட்டுமே செயல்பட்டவை.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணி கிடைக்கும் என்ற நிலை உருவான பிறகு, தமிழகக் கல்வி உலகில் புதிய மாற்றம் ஏற்பட்டது. அரசியல் செல்வாக்குகள் மூலம் பணி நியமனம் பெறும் தகுதியில்லாத, சம்பளம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட ஆசிரியர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறையும், தரமான ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் வலம் வருவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
ஆனால், தகுதியை உயர்த்தும், உயர்த்திக்கொள்ளும் முயற்சிகளில் யாரும் இறங்கவில்லை. தகுதித் தேர்வை தங்கள் தகுதிக்கு ஏற்ப குறைக்கும் நடவடிக்கைகளைத்தான் பல வகைகளிலும் காண்கிறோம். தகுதித் தேர்வு மதிப்பெண்ணை குறைக்கக் கோரியும், சிறப்புச் சலுகை தரக்கூடாது என்றும், இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்
படவில்லை என்றும் ஒவ்வொரு காரணத்துக்கும் ஒரு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் பின்னணி, பெரும்பான்மையான கல்வியியல் கல்லூரிகளின் தாளாளர்கள் அரசியல்வாதிகளாக இருப்பதுதான். தமிழ்நாட்டை விட்டால் வேறு எங்கும் நம்மால் ஆசிரியர் தொழில் செய்ய முடியாது என்கிற தாழ்வு மனப்பான்மையில் ஆசி
ரியர் பட்டம் பெற்றவர்கள் சிக்கிக் கொண்டிருப்பதால், அவர்கள் தங்களை இயக்குபவர்களின் கைப்பாவைகளாக மாறிப்போகிறார்கள்.
இன்றைய தேவை, கல்வியியல் நிறுவனங்களைத் தரமானவையாக ஆக்குவதும், அவற்றின் அனுமதியை மறுபரிசீலனைக்கு உள்படுத்துவதும்தான். தமிழ்நாட்டில் புற்றீசல் போலத் தோன்றியுள்ள கல்வியியல் கல்லூரிகளை முறைப்படுத்தும் முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டாக வேண்டும்.
லாபம் கருதித் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் (போதிய வருவாய் இல்லை என்பதற்காக பி.எட். தொடங்கிய பல்கலைக்கழகங்கள் உள்பட) அனைத்தையும் ஆய்வுக்கு உள்படுத்தி, தரமில்லாத, தேர்ச்சி விகிதம் குறைவான, பயிற்றுநர்கள் இல்லாத கல்வியியல் கல்லூரிகளின் அனுமதியை ரத்து செய்வதோடு பாடத்திட்டம், பயிற்சி அனைத்தையும் வலுப்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் கல்வியியல் கல்லூரிகள் தரமானவையாக இருக்குமெனில், தங்கள் மாணவர்களுக்கு தமிழக அரசுப் பள்ளிகள் மட்டுமே கதி என்று இல்லாமல், இந்தியா முழுவதும் உலகம் முழுவதும் தமிழர்களுக்கு உள்ள கற்பித்தல் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள துணை புரியும். தமிழகத்தில் பணியாற்றுவோரும், அடுத்த தலைமுறைக்கு தரமான கல்வியைக் கற்பிப்பார்கள்.
Good article
ReplyDelete