ஏ.கே.47 துப்பாக்கியுடன் இருக்கும் தீவிரவாதிகளை இனம் கண்டு கொள்வது சுலபம். அறிவுரை சொல்கிறேன் பேர்வழி என சில உளவியல் தீவிரவாதிகள் உலவிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை இனம் கண்டு கொள்வது கடினம். இவர்களிடமிருந்து நம்மையும், நம் எதிர்கால கனவுகளையும் பாதுகாத்து கொள்வது அதைவிட கடினம்.
இது 30 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை. சென்னையில் நடந்த கிரிக்கெட் மேட்சில், மதுரை அணியும், சென்னை அணியும் இறுதிப் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தன. சென்னை அணியின் சிறந்த பவுலர் பந்தை, மதுரையை சேர்ந்த ஒரு இளைஞர் விளாசு விளாசு என விளாசிக் கொண்டிருந்தான். இதே ரீதியில் போனால் நிச்சயம் தோற்றுவிடுவோம் என புரிந்து கொண்டனர் சென்னை அணியினர். அவர்களுக்கு தெரிந்த உளவியல் தீவிரவாதியிடம் விஷயத்தை சொன்னார்கள்.
‘ரொம்ப சுலபம், அது சரி உங்க பவுலர் பேர் என்ன?’
‘ரவி.’
அன்று மதியம் உணவு இடைவேளையின் போது, மதுரை இளைஞன் சாப்பிடும் இடத்துக்கு மிக அருகில் ஒரு நண்பனோடு சாப்பிட உட்கார்ந்தான் அந்த உளவியல் தீவிரவாதி.
வேண்டுமென்றே சத்தமாக பேசினான்.
‘டேய் உனக்கு விஷயம் தெரியுமா? நம்ம பவுலர் ரவி இருக்கானே, அவன இந்திய கிரிக்கெட் டீமுக்கு செலக்ட் பண்ணப் போறாங்களாம். அவன் பவுலிங்க பாத்துட்டு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடற விஸ்வநாத்தே ஆடிப்போயிட்டாராம்.’
அதை கேட்ட மதுரை இளைஞன் அதிர்ந்தான். அதுவரை அந்த பவுலரை சாதாரணமாக நினைத்துக் கொண்டிருந்தான். இந்தியாவுக்கே விளையாடப் போறானா? அவன் வீசும் பந்துகளை எப்படி எதிர்கொள்வது என பயந்தான். அந்த நடுக்கத்தோடு விளையாட இறங்கியவன் மூன்றாவது பந்தில் அவுட்டாகி திரும்பி வந்தான்.
இத்தனைக்கும் அந்த உளவியல் தீவிரவாதி சொன்னது பச்சைப் பொய். ஆனால் அது ஆடுபவனின் மனதை ஆழமாக பாதித்துவிட்டது.
இதுபோன்ற உளவியல் தீவிரவாதிகள் உங்கள் வாழ்க்கையிலும் தோன்றுவார்கள். சிலர் நண்பர்களாக வருவார்கள். சிலர் ஆசிரியர்களாக, ஏன் சில சமயம் பெற்றோர்களாகவும் வருவார்கள்.
‘ஆமா நீ ஐ.ஏ.எஸ். படிச்சி கலெக்டராகி... நாடு உருப்பட்டாப்லதான்.’ என்று சொல்லி தொய்வடைய செய்வார்கள்.
‘என்னது நீ பாடப்போறியா? டேய் வீட்டு வாசல்ல வர கழுதை கூட்டத்த யாருடா கன்ட்ரோல் பண்றது?’ என்று சொல்லி உற்சாகத்தை குலைப்பார்கள்.
இந்த உளவியல் தீவிரவாதிகளிடம் உஷராக இருங்கள்.
அப்படி உஷாராக இருந்த ஒருவரை பற்றி எனக்கு தெரியும். அந்த இளைஞனுக்கு சிறு வயதில் இருந்தே செஸ் விளையாடுவதென்றால் அவ்வளவு ஆசை. அவனது தந்தை அப்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்தார். வீட்டில் தாயுடன் செஸ் ஆடிக் கொண்டே இருப்பான். மீண்டும் அவர்கள் சென்னைக்கு வந்த போதும் அந்த பழக்கம் தொடர்ந்தது. இதற்கிடையில் பிளஸ் 2 முடித்து சென்னை கல்லுõரி ஒன்றில் பி.காம் சேர்ந்தான்.
செஸ் விளையாட்டு இன்னும் தீவிரமாகியது. பல்கலைக்கழக போட்டிகளில் பரிசுகளை குவிக்க ஆரம்பித்தான்.
அந்த சமயத்தில் அவனுடைய வாழ்க்கையில் ஒரு உளவியல் தீவிரவாதி தோன்றினார். அவனுடைய நெருங்கிய உறவினர் வடிவத்தில்.
‘இங்க பாருப்பா. செஸ் உனக்கு சோறு போடாது. கொஞ்ச நாளைக்கு செஸ்ஸ மூட்ட கட்டி வச்சிட்டு நல்லாப் படி. பி.காம் பாஸ் பண்ணு. அப்புறம் பேங்க் ஆபிசர் பரீட்சை எழுது. 22 வயசுல பேங்க் ஆபிசரா சேந்தா ரிட்டையராகும் போது ஜெனரல் மேனேஜராயிரலாம். அத விட்டுட்டு சதா சர்வகாலமும் அம்மாவும், பிள்ளையும் செஸ் விளையாண்டுகிட்டு, நல்லாவா இருக்கு?’
இந்தியாவில் உள்ள நுõத்திச் சொச்சம் கோடி பேர்களும் செய்த புண்ணியத்தின் பலனாக அந்த இளைஞன், உளவியல் தீவிரவாதி சொன்னதை உதாசீனப்படுத்தினான். தொடர்ந்து செஸ் விளையாடிக் கொண்டேயிருந்தான்.
அந்த இளைஞன் பெயர் விஸ்வநாதன் ஆனந்த். உலகில் முன்னணியில் இருக்கும் செஸ் விளையாட்டு வீரர்.
உளவியல் தீவிரவாதிகள் உங்களை சுற்றி உலவிக் கொண்டிருக்கிறார்கள். உஷார்.
- வரலொட்டி ரெங்கசாமி
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.