மதுரை மாவட்டத்தில் அக்.,25ல் (சனி) செயல்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு சத்துணவு வழங்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அக்.,22 தீபாவளியை முன்னிட்டு அக்.,21 அன்றும் தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதை ஈடுசெய்யும் வகையில் அக்.,25 சனியன்று திருமங்கலம் உட்பட பல்வேறு கல்வி ஒன்றியங்களில் பள்ளிகள் செயல்பட்டன. ஆனால் அன்று மதியம் சத்துணவு வழங்கப்படாததால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதற்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருமங்கலம் செயலாளர் பாஸ்கரசேதுபதி பாண்டியன் கூறியதாவது: தொடக்கம் மற்றும் நடுநிலை பள்ளிகள் ஓர் கல்வியாண்டில் 220 நாட்கள் செயல்பட வேண்டும். இந்நாட்களில் மாணவர்களுக்கு கட்டாயம் சத்துணவு வழங்க வேண்டும்.
விழாக்கள், பண்டிகை, மழை, புயல் வெள்ளம் போன்ற காரணங்களுக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, அதற்கு ஈடாக அடுத்துவரும் சனியன்று பள்ளி செயல்பட்டால் அன்று சத்துணவு வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து கேட்டால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உரிய பதில் அளிப்பதில்லை. திடீர் விடுப்பை ஈடுசெய்யும் வகையில் சனியன்று பள்ளிகள் செயல்பட்டால் அன்று சத்துணவு வழங்க வேண்டும் என்றார்.
திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது: வாரத்தில் வேலைநாட்கள் தவிர சனி அன்று பள்ளிகள் செயல்பட்டால் சத்துணவு வழங்கக்கூடாது, என எங்களுக்கு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
திருமங்கலம் மட்டுமல்ல, மாநில அளவில் அக்.,25ல் எங்குமே சத்துணவு வழங்கப்படவில்லை. தற்போது மாணவர்களுக்கு கலவை சாதங்கள் (வெரைட்டி ரைஸ்) வழங்கப்படுகின்றன. வாரத்தின் ஒவ்வொரு நாளிலும் ஒரு மெனு தயாரிக்கப்படும். சனியன்று என்ன சாதம் வழங்க வேண்டும் என்ற மெனு ஏதும் குறிப்பிடப்படவில்லை, என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.