Pages

Tuesday, October 28, 2014

தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கு

தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி 2009-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தைச் செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் ஜி.சரவணக்குமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: நான் தாழ்த்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தவன். வழக்குரைஞராகப் பயிற்சி செய்து வருகிறேன்.


தமிழ்நாடு அருந்ததியர் சட்டம் 2009-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தில் மாநில அளவில் உள்ள கல்வி நிறுவனங்களில் (தனியார் கல்வி நிறுவனங்கள் உள்பட) தாழ்த்தப்பட்டோருக்கான 16 சதவீத இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2009-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக அரசு ஓர் அரசாணையை வெளியிட்டது. அதில், ஒவ்வொரு பணி நியமனத்தின் போதும் அருந்ததியர்களுக்கு முதல் இடம் வழங்கப்படும். தாழ்த்தப்பட்டோருக்கு அருந்ததியருக்கு அடுத்ததாகப் பணி நியமனம் வழங்கப்படுகிறது.
இதனால், அருந்ததியர் அல்லாத தாழ்த்தப்பட்டோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு உயர் நிலை அல்லது நடு நிலையான பதவிகள் கிடைப்பதில்லை. அருந்ததியருக்கான 3 சதவீத இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்டோர் அருந்ததியரும் பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.
அவ்வாறு மூன்று சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கான இடம் நிரம்பவில்லையெனில், அருந்தததியர் அல்லாத பிரிவின் கீழ் நிரப்பப்படுகின்றனர். இது தன்னிச்சையானது.
இந்த நிலையில் உரிமையியல் நீதிபதிகளுக்கான தேர்வு அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்டது. அதில், தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்கள் இடங்களுக்கு முன்னுரிமை வழங்கிய பிறகே, மற்றவர்கள் பணி நியமனம் செய்யப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, 2009-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு அருந்ததியர் சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும். உரிமையியல் நீதிபதிகளுக்கான தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் அதில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் சதீஷ் கே.அக்னிஹோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.