Pages

Friday, September 19, 2014

தமிழகப் பல்கலைகளில் இந்திக்கு இடமில்லை: முதல்வர் திட்டவட்டம்

"இந்தி பேசாத மாநில மக்கள் மீது, இந்தி மொழி திணிக்கப்படக் கூடாது என்பதிலும், அவ்வாறு எடுக்கப்படும் முயற்சியை எதிர்த்து முறியடிப்பதிலும், இந்த அரசு உறுதியாக உள்ளது" என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவரது அறிக்கை: இந்தி மொழியிலுள்ள UGC சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டுமென, தமிழகத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கோரியுள்ளனர்.


இந்த சுற்றறிக்கை, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு மட்டும், கடந்த 16ம் தேதி கிடைத்துள்ளது. அலுவல் மொழிகளுக்கான, பார்லிமென்ட் குழுவின் செயல் அமைப்பான கேந்திரிய இந்தி சமிதியின் 30வது கூட்டம், 2011 ஜூலை 28ம் தேதி, அப்போதைய பிரதமர் தலைமையில் நடந்தது.

முதன்மை பாடம்

அந்தக் கூட்ட நடவடிக்கை குறிப்பின்படி, ஆங்கிலத்துடன் இந்தி மொழியும், முதன்மைப் பாடமாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும். சட்டம் மற்றும் வணிகவியல், பட்டப்படிப்பு படிப்போருக்கு, கட்டாயம் ஆங்கிலம் கற்பிக்கப்படுவதுபோல், இந்தி கற்பிக்கப்பட வேண்டும் என, இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்கள் குறித்த அறிக்கையை, பல்கலைக்கழகங்களிடம் இருந்து, பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.,) கோரியுள்ளது.

இதில் இருந்து, இந்தி மொழி திணிக்கும் முயற்சிக்கு, அடிப்படைக் காரணம், அலுவல் மொழிகளுக்கான பார்லிமென்ட் குழுவின் செயல் அமைப்பான கேந்திரிய இந்தி சமிதி எடுத்த முடிவு என்பது தெரிகிறது.

இந்த அரசைப் பொறுத்தவரை, இந்தி பேசாத மாநில மக்கள் மீது, இந்தி மொழி திணிக்கப்படக்கூடாது என்பதிலும், அவ்வாறு எடுக்கப்படும் முயற்சியை எதிர்த்து முறியடிப்பதிலும் உறுதியாக உள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு, யு.ஜி.சி.,யின் சுற்றறிக்கை அறவே பொருந்தாது.

தமிழக பல்கலைகளை கட்டுப்படுத்தாது

இது சட்டத்திற்கு புறம்பானது. தமிழகத்தில் உள்ள, அனைத்து பல்கலைக்கழகங்களிலும், தமிழ் அல்லது இதர மொழிகள் முதல் மொழியாகவும், ஆங்கிலம் இரண்டாம் பகுதியாகவும், சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகள் மூன்றாம் பகுதியாகவும் தொடர்ந்து இருக்கும்.
கடந்த 2011 ஜூலை 28ம் தேதி நடந்த கேந்திரிய இந்தி சமிதி கூட்ட முடிவுகள், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தாது என, யு.ஜி.சி.,க்கு தெரிவிக்கும்படி தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு அறிவுரை வழங்க, தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.