Pages

Monday, September 29, 2014

தேர்வுக் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்: இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அண்மையில் உயர்த்திய தேர்வுக் கட்டண உயர்வை, வாபஸ் பெற வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 2002 ஆம் ஆண்டு வேலூர் கோட்டையில் தொடங்கப்பட்ட திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இப்போது, காட்பாடியை அடுத்த சேர்க்காட்டில் இயங்கி வருகிறது.


இப்பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 115 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக் கல்லூரிகளில் ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் ஏழை-எளிய கிராமப்புற மாணவ-மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில், அண்மையில் இப் பல்கலைக்கழகம் தனது தேர்வுக் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தி உள்ளது. முன்பு, இளங்கலை படிப்பு தாள் ஒன்றுக்கான தேர்வுக் கட்டணம் ரூ.45, முதுகலைப் படிப்பு தாள் ஒன்றுக்கு ரூ.75, மதிப்பெண் சான்றிதழ் பெற ரூ.25, செய்முறைத் தேர்வுக்கு ரூ.100, தேர்வு விண்ணப்பத்துக்கு ரூ.25 என்று கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. இந்த கட்டணங்களில் இப்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இளங்கலை படிப்பு தாள் ஒன்றுக்கான தேர்வுக் கட்டணமாக ரூ.85, முதுகலைப் படிப்பு தாள் ஒன்றுக்கு ரூ.150, மதிப்பெண் சான்றிதழ் பெற ரூ.75, செய்முறைத் தேர்வுக்கு ரூ.180, தேர்வு விண்ணப்பத்துக்கு ரூ.50 என்று உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் "ஏழை-எளிய மாணவ-மாணவியரை பாதிக்கும் வகையில் உயர்த்தப்பட்டுள்ள இந்த கட்டண உயர்வுகளை ரத்து செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று இந்திய மாணவர் சங்க திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் கோ.சிலம்பரசன், மாவட்டச் செயலாளர் ந.அன்பரசன் ஆகியோர் அறிக்கை மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.