Pages

Tuesday, September 23, 2014

காலாண்டு தேர்வு விடைத்தாள்களையும் பொதுத்தேர்வு பாணியில் மதிப்பீடு செய்ய உத்தரவு

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு காலாண்டுத் தேர்வு விடைத்தாள்களை பொதுத்தேர்வு பாணியில், வெவ்வேறு பள்ளிகளுக்கு அனுப்பி மதிப்பீடு செய்ய வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, அரசுப் பள்ளி ஆசிரியர் சிலர் கூறியதாவது: வழக்கமாக, காலாண்டுத் தேர்வு, பொதுத்தேர்வு பாணியில் நடக்கும். ஆனால், விடைத்தாள் திருத்தும் பணி, அந்தந்த பள்ளியிலேயே நடக்கும்.


இந்த ஆண்டு, ஒரு பள்ளியின் விடைத்தாளை, அருகில் உள்ள வேறொரு பள்ளிக்கு அனுப்பி மதிப்பீடு செய்ய வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்துப் பள்ளிகளின் விடைத்தாள்களும், மாவட்டத்திற்குள் உள்ள, வெவ்வேறு பள்ளிகளுக்கு அனுப்பப்படும். இதனால், மதிப்பீடு, சரியான முறையில் இருக்கும் என, கல்வித் துறை கருதுகிறது.

இதற்கு, வெவ்வேறு பள்ளி ஆசிரியரை, தேர்வுப் பணியில் ஈடுபடுத்தி இருக்க வேண்டும். பொதுத்தேர்வில், ஒரு பள்ளியின் ஆசிரியர், அதே பள்ளியில் பணியில் இருக்க மாட்டார். வேறொரு பள்ளிக்கு அனுப்பப்படுவார். தற்போது அதுபோல் நடக்கவில்லை.

இதனால், தம் பள்ளி மாணவரின் விடைத்தாளை, வேறொரு பள்ளி ஆசிரியர், கடுமையான முறையில் திருத்தி, மதிப்பெண்ணை குறைத்துவிட்டால், அதிகாரிகள் அர்ச்சனைக்கு ஆளாவோம் என, ஒரு பள்ளியின் ஆசிரியர் நினைக்கலாம்.

இதனால், ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு, ஆசிரியரே, விடையை கூறுவதற்கும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற பிரச்னைகளையும் சரி செய்தால், அனைத்துப் பணிகளும், பொதுத்தேர்வு போன்று நடக்கும். இதனால், தேர்ச்சி எந்த அளவிற்கு இருக்கும் என்பதையும் ஓரளவு அறிய முடியும். இவ்வாறு ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இரு வகுப்பு தேர்வுகளும், ஏற்கனவே துவங்கி, பல தேர்வுகள் முடிந்து விட்டன. மீதமுள்ள சில தேர்வுகள், வரும் 26ம் தேதி வரை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.