Pages

Sunday, August 24, 2014

பள்ளிக்கல்வி ஆணைகளை புத்தகமாக வெளியிடுக! பெற்றோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் வலியுறுத்தல்

கல்வி, குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் கவனிப்பு போன்றவற்றில் பயிற்சி அளிக்கும் வகையில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலமாக, மாவட்டம் தோறும், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு முகாமை அரசே நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாணவர் - பெற்றோர் நலச்சங்கம் சார்பில் பெற்றோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் சனிக்கிழமையன்று (ஆக.23) சென்னை எழும்பூரில் நடைபெற்றது.பள்ளிகளுக்கு கல்வித்துறை வழங்கும் அறிவுரைகளையும், ஆணைகளையும் பெற்றோர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அவற்றை தொகுத்து ஆண்டுக்கு ஒரு முறை மலிவு விலையில் புத்தகமாக வெளியிட வேண்டும், தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயக்குழு, பள்ளிகளுக்கு, கட்டணத்தை உயர்த்திக் கொடுக்கும் போது அதற்குரிய காரணங்களை தெரிவிக்கும், குழுவின் ஆணையின் நகலை பெற்றோர்கள் அனைவருக்கும், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயக்குழு, கட்டணம் தொடர்பான புகார்களை மூன்று மாதங்களுக்குள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், கும்பகோணம் தீ விபத்தில் இறந்த குழந்தைகள் தினத்தை குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்து உள்ளூர் விடுமுறை வழங்க வேண்டும், அனைவருக்கும் சமமான விதத்தில் தரமான கல்வி கிடைத்திட அரசின் முழுப் பொறுப்பிலும், அரசின் செலவிலும் அருகாமைப்பள்ளி அமைப்பைக் கொண்ட பொதுப்பள்ளிகள் மூலம் கல்வி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டன.

சங்கத்தின் தலைவர் செ.அருமைநாதன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் “மாணவர்களின் கல்வியில் பெற்றோர்களின் பங்கு” என்ற தலைப்பில் இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் ஜே.ராஜ்மோகன், குழந்தை வளர்ப்பதில் பெற்றோர்களின் பங்கு என்ற தலைப்பில் எழுத்தளார் ஜே.ஜேசுதாஸ், குழந்தைகளை படிக்க வைக்க, கையாள வேண்டிய முறைகளில், பெற்றோர்களின் பங்கு எனும் தலைப்பில் குழந்தைகள் மன நல ஆலோசகர் எஸ்.எம்.ஏ.ஜமாலுதீன் உள்ளிட்டோர் பேசினர். தீர்மானங்களை வலியுறுத்தி பொதுச் செயலாளர் நா.வீரபெருமாள், பொருளாளர் எஸ்.ஜாகீர் உசேன் ஆகியோர் பேசினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.